இந்த தீபாவளிக்கு செட்டிநாடு சோமாஸ் ரொம்ப சுலபமாக இப்படி செய்தால் 10 நாள் ஆனாலும் மொறுமொறுவென அப்படியே இருக்கும்.

diwali-somas
- Advertisement -

ரவை, மைதா கொண்டு செய்யப்படும் இந்த சோமாஸ் பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் அலாதியானதாக இருக்கும். இனிப்பு சோமாஸின் சிறப்பு தன்மையே அதன் மொறுமொறுப்பு தான். தீபாவளி வந்துவிட்டாலே பலகாரங்கள் சுட ஆரம்பித்து விடுவோம். இன்னும் கொஞ்ச நாட்களில் தீபாவளி வரப் போகிறது. இந்த தீபாவளிக்கு அசத்தலான செட்டிநாடு சோமாஸ் நமத்து போகாமல் இப்படி செய்து பாருங்கள்! 10 நாட்கள் ஆனால் கூட அப்படியே ஃப்ரெஷ்ஷாக மொறுமொறுவென்று இருக்கும். ரொம்ப ரொம்ப சுலபமாக நீங்களே செய்து விடலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

somas

செட்டிநாடு சோமாஸ் செய்ய தேவையான பொருட்கள்:
மேல் மாவு: மைதா – 2 கப், ரவை – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. பூரணம்: தேங்காய்த் துருவல் – ஒரு கப், பாதாம், முந்திரி, திராட்சை – ஒரு கைப்பிடி, ரவை – ஒரு கப், சர்க்கரை – 2 கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

செட்டிநாடு சோமாஸ் செய்முறை விளக்கம்:
முதலில் மேல்மாவு செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை அதன் மேல்தோல் இல்லாமல் பூவாக துருவி வைத்துக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்றவற்றை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு மைதா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். மைதா மாவுடன் 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு ரவை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

maida-maavu

பின்னர் இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் 2 டீஸ்பூன் அளவிற்கு ஊற்றி நன்கு கலந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். சப்பாத்தி மாவு போல தளர்வாக பிசைந்தால் மாவை தேய்க்க வராது. எனவே உங்களால் முடிந்த அளவிற்கு கெட்டியாக மற்றும் மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள். நெய்க்கு பதிலாக 2 ஸ்பூன் சூடாக இருக்கும் எண்ணெயை ஊற்றியும் பிசையலாம்.

- Advertisement -

பூரணத்திற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து ஒரு கப் அளவிற்கு துருவிய தேங்காயை சேர்த்து நன்கு ஈரப்பதம் இல்லாமல் வறுத்து எடுக்க வேண்டும். அதிகம் சிவக்கவும் வறுத்து விடக்கூடாது. பின்னர் அதனை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள முந்திரி, பாதாம், திராட்சை இவற்றை சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதனுடன் ஒரு கப் அளவிற்கு ரவையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். ரவை நன்கு பொன்னிறமாக வறுபட்டதும் அடுப்பை அணைத்து அதில் 2 கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஏலக்காய் தூளையும் கலந்து பூரணத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

somas1

பிசைந்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளை பிடியுங்கள். எந்த அளவிற்கு நீங்கள் மெல்லியதாக மாவை உருட்டி எடுக்கிறீர்களோ! அந்த அளவிற்கு சோமாஸ் மொறுமொறுவென்று வரும். எனவே மாவை கொஞ்சமாக எடுத்து பெரியதாக உருட்டுங்கள். பூரி போல மாவை உருட்டியதும் உங்களிடம் சோமாஸ் செய்வதற்கான அச்சு இருந்தால் அதில் வைத்து இடையில் இருக்கும் குழியில் தயார் செய்து வைத்த பூரணத்தை தேவையான அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். ஓரங்களில் லேசாக தண்ணீரைத் தொட்டு தடவி கொள்ளுங்கள். அப்பொழுது தான் மாவு நன்றாக ஒட்டிக்கொண்டு பூரணம் எண்ணெயில் போட்டு பொரிக்கும் பொழுது வெளியில் வராமல் இருக்கும்.

somas-achu

பின்னர் மாவை மூடி அதிகமாக இருக்கும் மாவு பகுதியினை எடுத்துவிட்டு ஒரு பெரிய தட்டில் வைத்து விடவும். சோமாஸ் அச்சு இல்லாதவர்கள் மாவை பெரியதாக பூரி போல் செய்ததும் ஒரு டிபன் பாக்ஸ் மூடி அல்லது ஏதாவது ஒரு பெரிய கிண்ணத்தைக் வைத்து அழுத்தி வெளியில் அதிகம் இருக்கும் மாவை எடுத்து விடுங்கள். பின்னர் பூரணத்தை வைத்து மாவை பாதியாக மடித்து ஓரங்களை நன்கு தண்ணீர் தொட்டு அழுத்தி விட வேண்டும்.

somas0

அவ்வளவுதாங்க! இப்பொழுது தேவையான அளவிற்கு வட சட்டியில் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியம் ப்ளேமில் வைத்துவிட்டு சோமாஸ் மாவை ஒவ்வொன்றாக போட்டு நிதானமாக பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக செட்டிநாடு ஸ்டைலில் சோமாஸ் இப்படி செய்தால் சோமாஸ் நமத்துப் போகாமல் மொறுமொறுவென்று அப்படியே இருக்கும். நீங்களும் ஒருமுறை இதுபோல் முயற்சி செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -