சுரைக்காய் பொரியல் இப்படி மட்டும் செஞ்சு பாருங்க இனி அடிக்கடி உங்க வீட்டில் இருந்த பொரியல் தான்!

sorakkai-poriyal
- Advertisement -

எப்போதும் ஒரே வகையான காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைப்பவர்கள் ஏராளமானோர் நம் நாட்டில் உண்டு. அவர்கள் ஆரம்பத்தில் என்ன கற்றுக் கொண்டார்களோ, அந்த காய்கறிகளை மட்டும் வைத்து சமையலை முடித்து விடுவார்கள். ஆனால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய காய்கறிகளில் ஒன்றாக இருக்கும் இந்த சுரைக்காயை பெரும்பாலானோர் பயன்படுத்துவது கிடையாது, இதில் இருக்கும் சத்துக்கள் என்னவோ ஏராளம்! சுரைக்காய் பொரியல் ரொம்பவே சுலபமாக டேஸ்டியாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சுரைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய சுரைக்காய் – 1, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – இரண்டு, காய்ந்த மிளகாய் – ஒன்று, சின்ன வெங்காயம் – 10 அல்லது பெரிய வெங்காயம் – 1, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப்.

- Advertisement -

சுரைக்காய் பொரியல் செய்முறை விளக்கம்:
முதலில் பெரிய சுரைக்காய் ஒன்றை பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் பகுதியை லேசாக பீலர் வைத்து தோலுரித்துக் கொள்ளுங்கள். பின்னர் உள்ளே இருக்கும் சதைப் பகுதியை நன்கு சுத்தம் செய்த பின்பு, சிறு சிறு துண்டுகளாக அப்படியே வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். புடலங்காயின் உள்ளே விதைகள் இருப்பது போல இதற்கு விதைகள் அவ்வளவாக இருக்காது எனவே இதை அப்படியே பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள் அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் அதில் பச்சை மிளகாய் 2 மற்றும் வர மிளகாய் ஒன்றை துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். லேசாக வதக்கிய பின்பு ஒரு இணுக்கு கறிவேப்பிலை மற்றும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் வெட்டி வைத்துள்ள சுரைக்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

சுரைக்காய் நீர் விடாது எனவே சுரைக்காய்க்கு தேவையான தண்ணீரை தெளித்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்த்து வாணலியை மூடி வைத்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடத்தில் நீர் வற்றி சுரைக்காய் நன்கு வெந்து போயிருக்கும், அதன் பின்பு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சீரகத்தை சேர்த்து அரைத்து தூவி இறக்கி சுடச்சுட சாதத்துடன் பரிமாறினால் அவ்வளவு அட்டகாசமான சுரைக்காய் பொரியல் தயார்! சுரைக்காயில் உப்பு இல்லை, ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற பழமொழி எல்லாம் சுரைக்காயை ஞாபகப்படுத்தும் ஆனால் சுரைக்காய் எப்படி இருக்கும்? என்று கூட பலருக்கு தெரியாது எனவே நீங்கள் இப்படி செய்து பாருங்கள், இனி அடிக்கடி உங்கள் வீட்டில் இந்த பொரியல் தான்!

- Advertisement -