தக்காளி சேர்க்காமல் 2 ஸ்பூன் தனியா இருந்தால் போதும், இந்த சட்னியை நீங்களும் நொடியில் செய்து அசத்தலாமே!

thaniya-chutney
- Advertisement -

தக்காளி விக்கிற விலைக்கு தக்காளி சட்னி செய்யனுமா? என்று அங்கலாய்ப்பவர்களுக்கு இந்த சட்னி வகைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். தனியா போட்டு செய்யப்படும் இந்த கார சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவையை கொடுக்கப் போகிறது. இட்லி, தோசைக்கு சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த சட்னியை நிச்சயம் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த தனியா கார சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

தனியா காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தனியா விதை – 2 ஸ்பூன், வெந்தயம் – 10, வர மிளகாய் – 3, காஷ்மீரி மிளகாய் – 3, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – 2, பூண்டு பற்கள் – 10, புளி – சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

தனியா காரச் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை எடுத்து வையுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு தனியா விதைகளை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். பின்னர் பத்து, பன்னிரண்டு வெந்தயத்தை மட்டும் வாசனைக்காக சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் வர மிளகாய் நான்கு அல்லது வர மிளகாய் 3, காஷ்மீரி மிளகாய் 3 என்று சேர்த்து எண்ணெயில் வறுக்க வேண்டும். பின்னர் இவற்றை தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.

பின்னர் அதே வாணலியில் இன்னும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு தோலுரித்து பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்தில் வரும் பொழுது, பூண்டு பற்களையும் தோல் உரித்து சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஒரு சிறிய கோலி குண்டு அளவிற்கு புளியை சேர்த்து வதக்குங்கள். இவை நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் சேர்த்துள்ள தனியா, மிளகாய் போன்றவற்றை ஒருமுறை நன்கு சுற்றி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் ஆற வைத்துள்ள வெங்காயம், பூண்டு போன்றவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சூப்பரான தனியா கார சட்னிக்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

chutney1

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் அவற்றுடன் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேருங்கள், இறுதியாக ஒரு வர மிளகாயை கிள்ளிச் சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுவையாக இருக்கும் இந்த சட்னியை இதே முறையில் முயற்சித்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -