சுட சுட தவளை வடை டீ குடிக்கும் நேரத்தில் இப்படி செய்து பாருங்கள்! இன்னும் இன்னும் வேண்டுமென்று கேட்பார்கள். அதென்னங்க தவளை வடை?

thavalai-vadai2
- Advertisement -

பச்சரிசி, துவரம் பருப்பு சேர்த்து செய்யப்படும் இந்த தவலை வடை பல இடங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆமவடை என்றால் அதில் ஆமை எல்லாம் சேர்ப்பது கிடையாது. அதே போல தவலை வடை காலப்போக்கில் மருவி தவளை வடை ஆனது. தமிழில் ஒரு எழுத்து மாறினாலும் அதன் அர்த்தமே மாறிவிடுகிறது. அந்த வகையில் இந்த தவலை வடை, தவளை எல்லாம் சேர்த்து செய்வது கிடையாது. முற்றிலும் சைவ பொருட்களை கொண்டு செய்யப்படும் இந்த தவலை வடை அலாதியான சுவை கொண்டது. நீங்களும் இதே மாதிரி முயற்சித்து பார்த்து சுவைக்கலாமே! சரி, ருசியான தவலை வடை செய்வது எப்படி? என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

rice-thor-dal-paruppu

தவலை வடை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 2 கப், துவரம் பருப்பு – 11/4 கப், வர மிளகாய் – 12, உப்பு – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – மூன்று, கறிவேப்பிலை – இரண்டு கொத்து, சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – ஒரு டீஸ்பூன், சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

தவலை வடை செய்முறை விளக்கம்:
தவலை வடை செய்வதற்கு முதலில் பச்சரிசி மற்றும் துவரம் பருப்பை ஒரு இருமுறை நன்கு அலசி சுத்தம் செய்து பின்னர் நல்ல தண்ணீர் ஊற்றி குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நீங்கள் மறுநாள் செய்வதாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரிசி, பருப்பு இரண்டும் நன்கு ஊறியதும் தண்ணீரை சுத்தமாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மற்ற சில பருப்பு வகைகளையும் சேர்த்து சிலர் செய்வது உண்டு.

thavalai-vadai

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை 12லிருந்து 15 வரை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை நன்கு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை சேர்த்து அதில் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைஸாக அரைத்து எடுக்க வேண்டும். வடைக்கு மாவு அரைப்பது போல அதிகம் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நிறைய சேர்த்தால் வடை நன்றாக இருக்கும். பின்னர் 2 கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி பொடி பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் வடை சுட தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

thavalai-vadai1

எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறிய குழி கரண்டியால் மாவை எடுத்து ஒவ்வொன்றாக ஊற்றி நன்கு வேக விடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வேக வைக்கவும். அரிசி, பருப்பு, மிளகாய் எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் இந்த வடை ரொம்பவே சூப்பராக இருக்கும். தண்ணீர் அதிகம் சேர்த்தால் வடை தட்டையாக போய்விடும். எனவே தண்ணீரை மட்டும் கவனமாக சேர்த்து கலந்தால் வடை சூப்பராக உப்பி வரும். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக பத்தே நிமிடத்தில் நம் வீட்டில் இருக்கும் குறைந்த பொருட்களை வைத்து சட்டென செய்யக்கூடிய இந்த தவலை வடையை நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -