சாக்கடையாக மாறிப்போன சோழர் காலத்து கோவில் கண்டுபிடிப்பு

Chola-temple-stone

திருச்சிக்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலிங்குப் பாலம் ஒன்று, சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் ஒன்றின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க முனையும் பார்த்திபன், முருகன், வினோத் ஆகியோர் கண்டுபிடித்து அளித்த தகவலின் அடிப்படையில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் பேராசிரியர் இராஜவேல் குழுவினர் இச்செய்தியை உறுதி செய்திருக்கிறார்கள்.

Kalvettu

திருச்சி – கரூர் புறவழிச் சாலையில் பெட்டைவாய்த் தலைக்கு அருகே காணப்படுகிறது தேவஸ்தானம் எனும் கிராமம். அங்கு 1,080 வருட காலம் பழைமையான பராந்தகச் சோழனது காலத்தில் கட்டப்பட்ட `பொன்னோடை பரமேஸ்வரம்’ எனும் திருக்கோயில் தற்போது பெட்டைவாய்த் தலை கலிங்குப் பாலத்தில் கற்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அழிந்த `பொன்னோடை பரமேஸ்வரம்’ திருக்கோயிலின் 25-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கலிங்குப் பாலத்தின் உட்சுவர் முழுவதும் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுகளில்தான் `பொன்னோடை பரமேஸ்வரம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்பகுதி `உத்தம சோழ சதுர்வேதி மங்கலம்’ என அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரின் நிர்வாகத்தைச் சபையோர் இத்திருக்கோயிலில் இருந்துதான் கவனித்து வந்திருக்கிறார்கள்.

அவற்றுடன் அழகான முற்காலச் சோழர் கலை அமைப்புடன் கூடிய கோயிலின் அங்கங்களாக விளங்கும் அடித்தளப் பகுதியான ஜகதி, குமுத வரிகள் மற்றும் சுவரில் புடைப்பாக விளங்கும் அரைத்தூண் வரிசை அழகுடன் அமைக்கப்படும் வியாழ மற்றும் கணபூத குள்ள உருவச் சிற்பங்கள் வரிசைகள் காணப்படுகின்றன. கோயிலின் முழுமையான கற்களை எடுத்து இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூத உருவங்கள் பல்வேறு இசைக்கருவிகளை ஏந்தி இசையமைக்கும் நிலையில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

Kalvettu

முதலாம் பராந்தகச் சோழனது கல்வெட்டே இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைமையானது. மேலும் உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கச் சோழன் கால கொடையளித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இத்தனை கல்வெட்டுகள், இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் சீரும் சிறப்புமாக வழிபாடு நடந்ததையே தெரிவிக்கின்றன.

இந்தக் கலிங்குக் கால்வாயில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் மூலம் ஸ்ரீ விக்கிரம சோழ வாய்க்கால், அருமொழி தேவ வாய்க்கால், குந்தவை வடிகால், வீர ராஜேந்திர சோழ வாய்க்கால் போன்றவை இருந்தது தெரியவருகிறது. இக்கோயிலுக்கு இவ்வூரில் நிலங்கள் இருந்துள்ளன. அவற்றின் எல்லைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வூரிலிருந்த நிலங்கள் காவிரியில் வெள்ளம் ஏற்படும் பொழுது நீர் நிறைந்து வேளாண்மை செய்ய இயலாமல் இருந்ததையும், காவிரிக் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததையும், அதனைத் தடுத்து நீர்நிலைகளையும் கால்வாய்களையும் ஊராரும், அரசும் பராமரித்து வந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

Kalvettu

மேற்கொண்ட தகவல்களை அளித்த பேராசிரியர் ராஜவேலிடம் மேற்கொண்டு கேட்கையில், “காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுக் கரை உடைந்து வேளாண்மை செய்ய முடியாமல் இருந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இன்று இந்தப் பகுதி காவிரியில் நீர் வராமல் வறண்டு போய் கிடக்கிறது. சோழர்கள் காலத்தில் காவிரி நீரை வாய்க்கால், கலிங்குகள் வழியாகத் திருப்பி ஏரிகளில் நிரப்பி விவசாயம் செய்து கோயில்களையும், வாய்க்கால்களையும் பராமரித்தனர். ஆனால், இன்று `பொன்னோடை பரமேஸ்வரம்’ கோயில் கற்கள் வழியாகச் சாக்கடை சென்றுகொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. இனியாவது இவ்வூரும், அரசும் இணைந்து செயல்பட்டு இப்பாலத்தில் உள்ள எல்லாக் கல்வெட்டுகளையும் அழியாமல் பெயர்த்தெடுத்து புதிய பாலத்தைக் கட்டி ஊரிலேயே கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கவேண்டும். நம் வரலாறும், தொன்மையும் காக்கப்பட வேண்டும்” என்று வருத்தத்துடனும், ஆதங்கத்துடனும் தெரிவித்தார்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதையும் படிக்கலாமே:
குரங்கின் சாபத்தால் நடந்த விபரீதம் – வீடியோ

English Overview:
1080 Years old Chola temple sculptures were found in the stone of a bridge. The bridge was constructed in British period. Now that particular temple was not there and it was destroyed.