நாளை 9/2/2022 தை கிருத்திகை! கந்தனை இப்படி வழிபடுங்கள் உங்கள் கர்ம வினைகள் யாவும் காணாமல் போகுமாம். தை கிருத்திகை விரதம் தரும் பலன்கள் என்னென்ன?

murugan-om
- Advertisement -

ஈசனின் மூன்றாம் கண்ணில் இருந்து உதித்த ஆறு தீப்பிழம்புகள் முருக அவதாரம் எடுத்தது. உலக நன்மைக்காக அவதரித்தவர் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக பக்தர்களுக்கு இன்றும் காட்சி புரிந்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு மிகவும் உகந்த நாளான தை கிருத்திகை நன்னாள் பக்தர்களால் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. நாளை பிலவ வருடத்தின் தை கிருத்திகையில் முருகனை எப்படி வழிபடலாம்? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனுக்கு பல விசேஷ தினங்கள் இருந்தாலும், தை கிருத்திகையும் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் கோலாகலமாக பூஜைகள் செய்யப்படும். ஆறு குழந்தைகளாக பிறந்த முருகனை கார்த்திகை பெண்கள் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். அதற்காக அவர்களை நட்சத்திரமாக கௌரவப்படுத்தினர் சிவன் மற்றும் பார்வதி தேவி.

- Advertisement -

பல நட்சத்திரங்கள் இருக்கையில் கிருத்திகை நட்சத்திரம் ரொம்பவே சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது எனவே இந்நாளில் முருகனை மட்டுமல்லாமல் கார்த்திகை பெண்களையும் வழிபட நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. தைக் கிருத்திகை நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீடு முழுவதும் சுத்தம் செய்து, முருகன் படத்திற்கு விசேஷ அலங்காரங்கள் செய்து பூச்சூடி நெய் விளக்கு ஏற்ற வேண்டும்.

6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, திருப்புகழ் பாடி, கந்த சஷ்டி கவசம் உரைத்தால் தீராத சிக்கல்களும், பிரச்சினைகளும் உடனே முடிவுக்கு வருவதாக நம்பிக்கை உள்ளது. மேலும் இந்நாளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு விரைவாக உண்டாகும் என்பது நியதி. சாட்சாத் அந்த முருகப் பெருமானே உங்கள் குழந்தையாக வந்து பிறப்பார் என்கிற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு. எனவே குழந்தை இல்லாதவர்கள் நாளை முருகனுக்கு விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்ளலாம். கர்ம வினைகள் தீர ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து முருகை வழிபடுங்கள்.

- Advertisement -

அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப விரதத்தை கடைபிடிக்க வேண்டுமே தவிர, உடலை வருத்திக் கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்று ஆன்மீகம் வலியுறுத்துவதில்லை. தீரவே தீராத நோய்கள் தீர தை கிருத்திகை அன்று விரதம் இருந்து பால், பழம் மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு முருகப் பெருமானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். தை கிருத்திகை நாளில் முருகன் கோவிலுக்கு சென்று அங்குள்ள முருகனை தரிசனம் செய்து, அர்ச்சனை செய்து வந்தால் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைய முருகனை வேண்டி வழிபடலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை, சச்சரவுகள் தீரவும் தை கிருத்திகை நாளில் முருகன் கோயிலுக்குச் சென்று முருகன் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்.

முருகனை மட்டுமல்லாமல் முருகன் கையில் வைத்திருக்கும் வேல் வழிபாடு செய்வதும் இந்நாளில் மிகவும் பிரசித்தி பெற்றது. வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் அதற்கு அபிஷேகம் செய்து தூப, தீப, ஆராதனை காண்பிக்க வேண்டும். ஆறுமுகனுக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைப்பதும் மிகவும் விசேஷமானது. சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகிய ஐந்து வகையான கலவை சாதங்களைப் படைத்து வழிபட்டு அதனை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி செய்ய நீங்கள் வேண்டிய வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த அற்புத நாளை தவற விட்டு விடாமல் முருக பக்தர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

- Advertisement -