நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இன்று ஒரு ரூபாய் சம்பாதித்தால் நாளை இரண்டு ரூபாயாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்போம். அதேபோல் வேலை செய்பவர்களும் இன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய வேலையை விட அடுத்த நாள் அதிகமாக செய்ய வேண்டும் அதன் மூலம் உயர் பதவியைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதே போல் தான் தொழில் செய்பவர்களும் இன்றைய தினத்தில் பத்து ரூபாய் லாபம் சம்பாதித்தால் நாளைய தினத்தில் 20 ரூபாய் லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். படிக்கும் பிள்ளைகளும் இந்த முறை எடுக்கும் மதிப்பெண்ணை விட அடுத்த முறை பரிட்சையில் அதிகளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் முன்னேற்றம் என்பது நம்முடைய வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கும். அந்த முன்னேற்றம் நல்ல முன்னேற்றமாக அமைந்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவதற்கு தை மாத ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
சூரிய மாதம், மகர மாதம் என்று கூறக்கூடிய மாதமாக தான் தை மாதம் திகழ்கிறது. அதனால் தான் தை மாதத்தின் முதல் நாள் அன்று சூரிய பகவானுக்கு பொங்கல் இட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தை நம்முடைய முன்னோர்கள் வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட தை மாதத்தில் சூரிய பகவானுக்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் அவரின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். யாரெல்லாம் ஏளனமாக பேசினார்களோ அவர்கள் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றே கூறலாம். அந்த வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டை தைமாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செய்ய வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வரக்கூடிய சூரிய ஹோரையில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நாம் சூரிய வெளிச்சம் படும் இடத்திலோ அல்லது வெட்ட வெளியிலோ செய்ய வேண்டும். வீட்டு வாசலில் அல்லது மொட்டை மாடியில் கூட செய்யலாம். இதற்கு நமக்கு சூரிய பகவானுக்குரிய தானியமான முழு கோதுமை வேண்டும். இதை ஒரு கிலோ அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து தலைக்கு குளித்துவிட்டு ஒரு தாம்பாள தட்டில் இந்த ஒரு கிலோ கோதுமையை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு கோதுமையால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள். இதை சூரிய வெளிச்சம் படும்படி கிழக்கு பார்த்தவாறு வைத்து நாமும் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு சூரிய பகவானை மனதார நினைத்துக் கொண்டு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்று முடித்த பிறகு சூரிய பகவானுக்குரிய மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்கள் ஒவ்வொன்றையும் 27 முறை உச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு ஊதுபத்தி ஏற்றி சூரிய பகவானுக்கு காட்ட வேண்டும். அடுத்ததாக கற்பூரத்தை ஏற்றி சூரிய பகவானுக்கு காட்ட வேண்டும். பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும், சூரியனைக் கண்ட பனிபோல வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இரண்டு கைகளினாலும் கோதுமையை எடுத்து கிழக்கு பார்த்தவாறு அதை பறவைகளுக்கு தானமாக போட வேண்டும்.
பிறகு இந்த தீபத்தை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜையில் வைத்து விடுங்கள். விளக்கை குளிர வைத்த பிறகு அந்த கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருளை பிரசாதமாக வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் சாப்பிட வேண்டும். கோதுமையை தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் இதே முறையில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்து கோதுமையை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கடைசி வாரம் வழிபாடு நிறைவு செய்த பிறகு சேர்த்து வைத்திருந்த கோதுமையை அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு தர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஆதரவற்றவர்களுக்கு, வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு அந்த கோதுமையை தானமாக தரவேண்டும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீம் சூரிய நாராயணாய நமோ நம
ஓம் ஆதித்ய நமோ நம
ஓம் சிவசிவ சூரியனே நமோ நம
இதையும் படிக்கலாமே:குலதெய்வ வேண்டுதலை மறந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த முறையில் சூரிய மாதத்தில் சூரிய நாளில் சூரிய ஹோரையில் சூரிய பகவானை நாம் வழிபாடு செய்ய நம்முடைய வாழ்க்கை என்றென்றும் சூரியனைப் போல பிரகாசமாக அமையும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.