குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். குரு இருக்கக்கூடிய இடத்திற்கு கூட அந்த அளவிற்கு சக்திகள் இல்லையாம். ஆனால் குரு பார்க்கக் கூடிய இடத்திற்கு பலவிதமான நன்மைகளை அவர் வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குரு பகவானை வழிபாடு செய்வதற்குரிய முக்கியமான நாளாக தான் தைப்பௌர்ணமி திகழ்கிறது. இதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக ஜீவசமாதி அடைந்த சித்தர்களை குருவாக நினைத்து அன்றைய தினத்தில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்று கூட கூறுவது உண்டு. அப்படிப்பட்ட குரு வழிபாட்டை வீட்டில் எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தை பௌர்ணமி குரு வழிபாடு
முருகப்பெருமானே தன்னுடைய தகப்பனான சிவபெருமானுக்கு குருவாக உபதேசம் செய்திருக்கிறார். மேலும் முருகப்பெருமான் நமக்கு குருவாக இருந்து நம்மை நல்வழிப்படுத்தக் கூடியவராகவும் திகழ்கிறார் என்பதால் தான் தை பௌர்ணமி அன்று தைப்பூசமும் சேர்ந்து வந்து முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்கிறோம். இதோடு மட்டுமல்லாமல் ஜீவசமாதி அடைந்த சித்தர்களையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அவர்களை மட்டும் வழிபாடு செய்வதோடு நிறுத்தி விடாமல் நவகிரகங்களில் இருக்கக்கூடிய குரு பகவானையும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் குருபகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
நவகிரகங்களில் இருக்கக்கூடிய குரு பகவானை நாம் தைப்பொவுர்ணமி நாளன்று சென்று வழிபாடு செய்ய வேண்டும். அவருக்கு முன்பாக 16 அகல் விளக்குகளில் மஞ்சள் திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு குரு பகவானுக்குரிய ஸ்லோகம் எது தெரியுமோ அதை கூறி அவரை வழிபாடு செய்யலாம். இவ்வாறு ஆலயத்திற்கு சென்று இப்படி தீபமேற்ற இயலாது என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையிலும் தீபம் ஏற்றலாம்.
தை பௌர்ணமி நாளன்று இந்த தீபத்தை காலையிலோ அல்லது மாலையிலோ ஏற்றுவது என்பது சிறப்பு. நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய ஈசானிய மூலையில் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு வெளிப்புறத்தில் மஞ்சளை நன்றாக தடவி குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு தட்டில் வைத்து ஈசானிய மூலையில் வைத்து நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் மூன்று திரிகளை போட வேண்டும். மூன்று என்பது குரு பகவானுக்குரிய எண்ணாக கருதப்படுகிறது. இந்த மூன்று திரிகளை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த மூன்று திரிகளில் ஒன்று கிழக்கு பார்த்தவாறும், ஒன்று வடக்கு பார்த்தவாறும், ஒன்று மேற்கு பார்த்தவாறும் இருக்க வேண்டும். தெற்கு பார்த்து தீபம் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தீபம் ஏற்றி வைத்துவிட்டு நாம் குருவாக யாரை நினைக்கிறோமோ அவரை மனதார நினைத்து அவரிடம் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் கூறுவது போல் அந்த தீபத்திடம் கூற வேண்டும். இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். நம்முடைய வழிப்பாடும் குறைந்தது பத்து நிமிடத்திலிருந்து 15 நிமிடம் ஆவது இருக்க வேண்டும். ஒருவேளை நாம் யாரையும் குருவாக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பவர்கள் முருகப்பெருமானை நினைத்தும் முருகப்பெருமானிடம் கூறுவது போல் நம்முடைய கஷ்டத்தை இந்த தீபத்திடம் கூறலாம்.
இதையும் படிக்கலாமே:தை கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
மாதா பிதா குரு தெய்வம் என்று குருவிற்கு அடுத்தபடியாக தான் தெய்வமே வருகிறார் என்பதால் தெய்வ வழிபாட்டை செய்வதற்கு முன்பாக குரு வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் தை பௌர்ணமி நாள் அன்று நம்முடைய குருவை நினைத்து நாம் ஏற்றக்கூடிய இந்த தீபம் நமக்கு அளவில்லா நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.