நன்றாக இருந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தோல்வி வருவதற்கு முதல் காரணம் இந்த கண்திருஷ்டி. கல் அடி பட்டாலும், சரி செய்து விடலாம். கண்ணாடி பட்டால் அதிலிருந்து மீளுவது மிகவும் கஷ்டம் என்பது முன்னோர்களின் வாக்கு. இது எந்த அளவுக்கு உண்மை என்பது கண் திருஷ்டி பட்டு அனுபவித்தவர்களால் மட்டும் தான் சொல்ல முடியும்.
இந்த கண் திருஷ்டியில் இருந்து, இந்த உலகத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த உலகத்திலேயே சிறந்த பரிகாரத்தை நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த பரிகாரத்தை தான் இன்றைய நாளில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதுவும் மகாளயா அமாவாசையான இன்று அந்த பரிகாரத்தை உங்களுக்கு நீங்களே செய்து, இந்த மையை தயார் செய்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கண் திருஷ்டியை கண்டு ஒரு காலமும் அஞ்ச வேண்டாம்.
தர்பை புல் மை பரிகாரம்
இந்த பரிகாரத்துக்கு கொஞ்சம் காய்ந்த தர்பை புல் நமக்கு தேவைப்படும். அது சுலபமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளலாம். நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்ல வேண்டும். அப்போது உங்கள் கையில் தர்ப்பை புல்லை வைத்துக் கொள்ளுங்கள்.
தர்ப்பை புல்லை கையில் வைத்துக்கொண்டு குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி அந்த தர்ப்பை புல்லை, அந்த நெய் விளக்கில் எரிக்க வேண்டும். தர்ப்பைப்புல் எரிந்த சாம்பலாகி கருப்பு நிறத்தில் சாம்பல் கிடைக்கும். அந்த சாம்பலை இரும்பு அல்லாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் நெய் ஊற்றி கலந்தால் கருப்பு நிறத்தில் மை கிடைத்துவிடும். இதை பூஜை அறையிலேயே வைக்கலாம்.
தினமும் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது இதை லேசாக இரண்டு புருவங்களுக்கு மத்தியில் பொட்டு போல இட்டுக் கொள்ளலாம். வெளியில் தெரியுமே, இது என்ன மை என்று எல்லோரும் கேட்பார்கள் என்றால், இரண்டு புருவங்களில் இந்த மையை தடவிக் கொள்ளலாம், அல்லது உச்சந் தலையில் இந்த மையை தடவிக் கொள்ளலாம். அதுவும் முடியாத என்பவர்கள் உள்ளங்காலில் இந்த மையை கொஞ்சம் தடவிக் கொண்டு வெளியில் செல்லுங்கள்.
இந்த மை உங்கள் உடம்போடு ஒட்டி உரசி இருக்கும் போது, உங்களிடம் எந்த கண் திருஷ்டியும் நெருங்காது. அது மட்டுமல்லாமல் காத்து கருப்பு சேட்டை எதிர்மறை ஆற்றலும் உங்களை நெருங்க முடியாது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த தர்ப்பை புல் மையை அமாவாசை நாள் அன்று நீங்கள் தயார் செய்து வீட்டில் வைத்தால் அமோக பலனை பெற முடியும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை அமாவாசை வரும்போது இந்த மையை தயார் செய்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
சில பேர் தர்ப்பை புல் வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். தர்பை புல் வீட்டில் இருக்கலாம். பூஜையறையில் தான் தர்ப்பை புல் இருக்க வேண்டும். தர்பை புல்லை எப்போதும் வீட்டில் படுக்க வைக்க கூடாது. மேலும் கீழுமாக, வானத்தைப் பார்த்து, பூமியை பார்த்து தான் தர்ப்பை புல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி கழிய மகாளயா அமாவாசை பரிகாரம்
ஒரு வீட்டில் தர்ப்பை புல் இருந்தாலும், அந்த வீட்டில் கண் திருஷ்டி பாதிப்பு இருக்காது. அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் தாங்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.