கிருஷ்ண ஜெயந்திக்கு, இந்த தட்டையை செய்து பாருங்க! சுலபமான முறையில் தட்டை செய்வது எப்படி?

வீட்டில் தட்டை செய்ய வேண்டும் என்றால், பச்சரிசி மாவை ஊற வைத்து, ரைஸ் மில்லில் கொடுத்து, அரைத்து தான் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்கள் வீட்டில் கடையிலிருந்து வாங்கிய பச்சரிசி மாவு இருந்தால், அதை வைத்து, மொறு மொறு தட்டையை சூப்பராக செய்து முடித்து விடலாம். இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு உங்கள் வீட்டில் இந்த தடையை செய்துதான் பாருங்களேன்! வாசனை கொண்ட தட்டையை சுலபமான முறையில் செய்வது எப்படி? பார்த்து விடலாமா?

Step 1:
முதலில் இரண்டு கைப்பிடி அளவு உளுத்தம்பருப்பை கடாயில் போட்டு, உளுந்தின் பச்சை வாடை போகும் அளவிற்கு, வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து சிவப்பு நிறமாக மாற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வருத்த உளுந்தை, நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து,  சலித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

(இந்த உளுந்து மாவை, மொத்தமாக தட்டைக்கு சேர்க்கப் போவதில்லை. தேவையான அளவு பயன்படுத்திக் கொண்டு, மீதியை டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். கொஞ்சமாக உளுந்து போட்டால் மிக்ஸியில் அரையாது அல்லவா?)இதேபோல் 2 கைப்பிடியளவு பொட்டுக் கடலையை வறுக்க வேண்டாம். அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1/2 கைப்பிடி அளவு கடலைப்பருப்பை தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் வரை ஊற வைத்துவிடுங்கள்.

thattai2

Step 2:
2 கப் அளவு பச்சரிசியை, ஒரு கடாயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து ட்ரையாக வறுக்க வேண்டும். அதாவது அந்த மாவை எடுத்து கோலம் போட்டீர்கள் என்றால், கம்பி இழுக்கும் பதத்திற்கு வரவேண்டும். ஈரப்பதம் மாவில் இருக்கவே கூடாது. வறுத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

- Advertisement -

Step 3:
நன்றாக ஆறிய மாவில், தட்டைக்கு தேவையான பொருட்களை சேர்த்து விடலாம். முதலிலேயே அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா? உளுந்து மாவு – 1/4 கப், பொட்டுக்கடலை மாவு – 1/4 கப், மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை பொடியாக நறுக்கியது, ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு, தேவையான அளவு உப்பு, 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். அடுப்பில் தட்டையை பொரிப்பதற்கு சூடாக இருக்கும் எண்ணெயிலிருந்து 2 டேபிள்ஸ்பூனை மாவில் ஊற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 கப் பச்சரிசி மாவிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவுகள் போட வேண்டும். இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் தெளித்து, பிசைய ஆரம்பிக்க வேண்டும். இந்த மாவு கையில் ஒட்டாமல், சப்பாத்தி மாவை பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிசைந்த மாவின் மீது ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தடவி 5 லிருந்து 10 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள் ‌.

10 நிமிடங்கள் ஊற வைத்த மாவை எடுத்து மீண்டும் ஒரு பக்குவத்திற்கு பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக பிடித்து, ஒரு பால் கவரில் வைத்து (கவரில் மாவு ஒட்டாமல் இருக்க, எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும்.) விரல்களாலேயே தட்டையை தட்டிக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள், கீழே ஒரு கவரை வைத்து, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து, அதன் மேல் மற்றொரு காவரை வைத்து, அடி சமமாக இருக்கும் டபராவை, அதன் மேல் அழுத்தினால், மாவு தட்டை வடிவத்தில் வட்ட வடிவமாக, அழகாக வந்துவிடும்.

thattai

ஒரு பக்கம் தடிமனாகவும், ஒரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கக் கூடாது. உங்கள் கைகளால் சமப்படுத்தி விட்டு, தட்டையை, தட்டி எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுத்தால் சுவையான தட்டை தயாரிக்கும். சுட்டு எடுக்கும் போதே வாசனை, அடுத்த வீடு வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் வீட்டில் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
இன்னைக்கு நைட், கோதுமை அடை தோசையை இப்படி சுட்டு பாருங்க! 10 நிமிஷத்துல டின்னர் ரெடி!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.