எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர். இவர் நவகிரகங்களின் தலைவராகவும் சனீஸ்வர பகவானின் குருவாகவும் கருதப்படுகிறார். இவரை முழுமனதோடு யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நவகிரக தோஷம் என்பது முற்றிலும் நீங்கும். மேலும் இவர் உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர் என்பதால் எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் தீரும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட கால பைரவருக்கு உகந்த திதியான அஷ்டமி திதி என்பது மாதத்தில் இரண்டு முறை வரும். வளர்பிறை அஷ்டமியில் நாம் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது செல்வநிலைகள் உயரும் என்றும், தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் காணாமல் போகும் என்று கூறப்படுகிறது.இந்த முறை தேய்பிறை அஷ்டமி என்பது செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் நாம் கால பைரவரின் ஆலயத்திற்கு சென்று இந்த முறையில் வழிபாடு செய்ய காலபைரவரின் அருளால் நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக திகழ்வது ராகு காலம். அதிலும் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்திற்கும் காலபைரவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த முறை தேய்பிறை அஷ்டமி என்பது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வருவதால் அருகில் இருக்கக்கூடிய அனைத்து சிவாலயங்களிலும் இருக்கும் காலபைரவருக்கு ராகு காலத்தில் சிறப்பு மிகுந்த அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த அபிஷேகங்களில் கலந்து கொண்டு பைரவருக்கு பன்னீர், புனுகு, ஜவ்வாது போன்ற வாசனை மிகுந்த பொருட்களை தர வேண்டும்.
மேலும் பைரவரின் சன்னதிக்கு முன்பாக ஒரு சிறிய பூசணிக்காயை இரண்டாக நறுக்கி அந்த பூசணிக்காயின் வெளிப்புறம் முழுவதும் மஞ்சளை தடவி ஐந்து இடங்களில் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பூசணிக்காய்க்கு நடுவில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிவப்பு நிற துணியில் 27 மிளகை வைத்து மூட்டையாக கட்டி அதை திரியாக பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். அடுத்ததாக ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் காலபைரவருக்கு பிடித்தமான செவ்வரளி மலர்களை வைக்க வேண்டும். அதோடு இரண்டு செவ்வாழை, இரண்டு பெரிய நெல்லிக்காய் இவை அனைத்தையும் வைத்து எடுத்துக்கொண்டு காலபைரவரை வலது புறமாக எட்டு முறையும் இடது புறமாக எட்டு முறையும் வளம் வர வேண்டும். பிறகு காலபைரவருக்கு நெய்வேத்தியமாக இந்த பொருட்களை கொடுத்துவிட்டு அங்கேயே அமர்ந்து “ஓம் ஸ்ரீம் சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ” என்னும் மந்திரத்தையும் “ஓம் ஸ்ரீம் கால பைரவரே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தையும் முழு மனதோடு 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
இப்படி செய்து முடித்துவிட்டு நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று முழு மனதோடு காலபைரவரை வழிபாடு செய்து விட்டு வீட்டிற்கு வர வேண்டும். இந்த ஒரு எளிமையான வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையான கடன் பிரச்சினை முற்றிலும் தீரும். சொன்ன ஆகர்ஷண பைரவரின் அருளால் செல்வங்கள் வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: நாளை 14-9-2025 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி
காலபைரவரின் அருளை பரிபூரணமாக பெற்று கடன் பிரச்சினை தீரவும் சொர்ண ஆகர்ஷன பைரவரின் அருளை பெற்று செல்வ வளத்துடன் வாழவும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் இந்த எளிமையான வழிபாட்டை செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.