90களின் மனம் கவர்ந்த தேன் மிட்டாய் செய்ய ஒரு கப் இட்லி மாவு இருந்தாலே போதுமே! உடனே செய்து பார்த்திடலாம்.

then-mittai1

தேன் மிட்டாய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் தேனின் சுவை ஊறுகிறது அல்லவா? 80 மற்றும் 90களில் மிகவும் பிரபலமாக இருந்த தேன்மிட்டாய் 2000 லிருந்து ஏதோ தடை செய்யப்பட்ட ஒன்றாகவே நமக்கு தெரிகிறது! அதற்கு காரணம் தேன் மிட்டாய் நம் கண்களில் பார்ப்பதற்கே இப்போதெல்லாம் சிரமமாக போய்விட்டது. பிறகு எங்கே வாங்கி உண்பது? வரைபடத்திலும், மீம்ஸ்களிலும் மட்டுமே உலா வந்து கொண்டிருக்கும் தேன்மிட்டாய் ஒருகாலத்தில் மிட்டாய்களின் ராஜாவாக இருந்தது. குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் பறித்து தின்ற சம்பவங்கள் ஏராளமாக உங்களுக்கும் நடந்திருக்கலாம். 25 பைசா தேன்மிட்டாயை உடன்பிறந்த பிறப்பிடமே விட்டுக் கொடுக்காமல் மறைத்து சாப்பிட்டதெல்லாம் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு கப் இட்லி மாவு இருந்தாலே அதை வீட்டில் நாமே செய்து விடலாமே?

then-mittai

பெட்டி கடை முதல் மிகப்பெரிய கடைகள் வரை தேன் மிட்டாய் சரளமாகக் கிடைக்கும் பொருளாக இருந்தது. ஆனால் இப்போது எங்கோ ஏதோ ஒரு கடைகளில் தென்பட்டால் தவிர்க்காமல் உடனே வாங்கி சாப்பிட்டு விடுகிறோம். அப்படித்தான் இன்று நிலைமை இருக்கிறது. பெரும்பாலான இன்றைய குழந்தைகளுக்கு தேன் மிட்டாய் என்றால் என்னவென்றே தெரியாமல் கூட இருக்கிறது. இதை நாம் வீட்டிலேயே அவர்களுக்கு செய்து கொடுத்து, நாமும் உண்டு மகிழலாம். தேன் மிட்டாய் எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேன் மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 1 கப், சமையல் சோடா – 1/4 டீஸ்பூன், சர்க்கரை – 1 கப், சமையல் எண்ணெய் – தேவையான அளவு, ஆரஞ்சு ஃபுட் கலர் – 1/4 டீஸ்பூன்.

idly-maavu

செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்றவைத்து அடி கனமான பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சர்க்கரை பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். ஒரு கப் அளவிற்கு சர்க்கரை எடுத்துக் கொண்டால் அதே கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். சர்க்கரைப்பாகு அதிகம் கொதித்து விடவும் கூடாது, குறைவாகவும் கொதிக்கக் கூடாது. ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு சரியான பதத்தில் கொதிக்க விடுங்கள். நீங்கள் கைகளில் எடுத்து பார்த்தால் ஒரு சிறிய கம்பி பதம் வர வேண்டும் அவ்வளவுதான். அப்போதுதான் தேன் மிட்டாய் மேலே சர்க்கரை சர்க்கரையை அப்படியே நிற்காமல் சூப்பராக ஜூஸியாக வரும்.

- Advertisement -

சர்க்கரை பாகு தயாரானதும் அடுப்பை அனைத்து விட்டு வாணலியில் சமையல் எண்ணெயை தேவையான அளவிற்கு ஊற்றி சூடாக்கி கொள்ளவும். தேன்மிட்டாய் செய்வதற்கு இட்லி மாவு தேவை. நீங்கள் இட்லி அரிசி, உளுந்து 4:1 என்கிற ரேஸியோவில் எடுத்துக் கொண்டு மூன்று மணி நேரம் அல்லது நான்கு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். அல்லது உங்களிடம் இட்லிக்கு புளிக்காத மாவு இருந்தால் நல்லது. தேன்மிட்டாய் செய்வதற்கு இட்லி மாவு புளிக்காமல் பிரஷ்ஷாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நிறைய எண்ணெய் குடித்துவிடும்.

then-mittai2

இந்த இட்லி மாவு, இட்லி அரிசியாக இருந்தாலும் சரி, ரேஷன் அரிசி ஆக இருந்தாலும் சரி, அல்லது சாப்பாடு அரிசியாக இருந்தாலும் சரி எந்த அரிசியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது இட்லி மாவில் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும். ஆரஞ்சு ஃபுட் கலர் தேவையென்றால் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள். ஆனால் ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்ப்பதால் பார்ப்பதற்கு நிறமாக நம்மைப் அந்த காலத்திற்குத் அழைத்து செல்லும். சேர்க்கவில்லை என்றால் வெள்ளையாகவே இருக்கும் அவ்வளவு தான் வித்யாசம்.

then-mittai3

இப்போது சூடாக இருக்கும் எண்ணெயில் டீஸ்பூன் ஒன்று எடுத்துக் கொண்டு கால் கால் டீஸ்பூனாக எண்ணையில் விட்டு வாருங்கள். அப்படியே சூப்பராக உப்பி வரும். இரண்டிலிருந்து மூன்று நிமிடத்திற்குள் மாவு வெந்து வந்துவிடும். எல்லா பக்கமும் சீராக வேகும் அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள். மாவு வெந்ததும் சூடாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து விடுங்கள். பாகு சூடாக இருந்தால் தான் உறிஞ்சிக் கொள்வதற்கு சுலபமாக இருக்கும். 2 லிருந்து 3 மணி நேரம் வரை அப்படியே ஊற விடுங்கள். பிறகு எடுத்து பார்த்தால் சுவையான அருமையான தேன் மிட்டாய் உங்களுக்கு கிடைத்துவிடும். அவ்ளோ தாங்க ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு மெத்தட் தான் இது. இதுக்காக நாம கடை கடையாய் தேடி அலையனும் என்று அவசியமே இல்லை. நாமலே செஞ்சி எல்லோருக்கும் பகிர்ந்து சந்தோஷப்பட்டுக்கலாம்.

இதையும் படிக்கலாமே
ரேஷன் கோதுமையை வைத்து, ஒரு முறை மாவை, இப்படி அரைத்து தான் பாருங்களேன்! கடையில் இருந்து காசு கொடுத்து கோதுமை வாங்கவே மாட்டீங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.