இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். பலருக்கும் இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வம் ஆகவும் அருள் புரிந்து கொண்டு இருக்கிறார் என்பதும் நாம் கண்ணார கண்டதே. அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு உகந்த கோவில்களாக கருதப்படுபவை தான் அறுபடை வீடுகள். அதிலும் குறிப்பாக தற்சமயத்தில் மிகவும் பிரசித்தி பெற்று பலராலும் வழிபாடு செய்யக்கூடிய ஒரு அற்புதமான ஆலயமாக திகழ்வதுதான் திருச்செந்தூர் ஆலயம். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழக்கூடிய இந்த திருச்செந்தூர் ஆலயம் மட்டும்தான் மலைப்பகுதியில் அல்லாமல் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட திருச்செந்தூர் முருகனின் ஆலயத்தில் ஜூலை மாதம் ஏழாம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
திருச்செந்தூர் முருகன் வழிபாடு
கும்பாபிஷேகத்தை பார்ப்பது என்பது கோடி பலனைத் தரும். கும்பாபிஷேகத்தை பார்க்க இயலாதவர்கள் கூட கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் அதாவது மண்டல பூஜை நிறைவடைவதற்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் சிறப்பு மிகுந்த ஆலயங்களில் கூடுதல் சிறப்பு பெற்றிருக்கும். இருப்பினும் இப்படி சிறப்பு மிகுந்த ஆலயங்களில் சென்று வழிபாடு செய்வது சாதாரண மக்களுக்கு நடக்காத ஒரு காரியமே. கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய பலரும் தங்களால் செல்ல இயலவில்லை என்று வருத்தப்படுவார்கள். மேலும் அந்த முருகனின் அருளை பெற முடியவில்லை என்றும் வேதனைப்படுவார்கள். அவர்களுடைய வருத்தத்தையும், வேதனையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை ஜூலை மாதம் ஏழாம் தேதி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் நடக்கக்கூடிய நேரத்தில் நாம் நம்முடைய வீட்டில் இந்த முறையில் முருகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானின் அருளை நம்மால் பெற முடியும். இதற்கு நம்முடைய வீட்டில் முருகப்பெருமானின் சிலை அல்லது வேல் இருக்கும் பட்சத்தில் அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதிலும் ஒரு சிறப்பான தீர்த்தத்தை பயன்படுத்தி அபிஷேகம் செய்ய வேண்டும். அந்த தீர்த்தம் தான் வில்வ இலை தீர்த்தம். ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் வில்வ இலைகளை போட்டு மூடி வைத்து விடுங்கள். இந்த வில்வ இலைகள் குறைந்தது ஒரு மணி நேரமாவது அந்த தண்ணீரிலேயே ஊற வேண்டும்.
இந்த தீர்த்தத்தை ஜூலை மாதம் ஏழாம் தேதி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் நம்முடைய வீட்டின் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் சிலை அல்லது வேலுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ஒருவேளை வில்வ இலை கிடைக்கவில்லை என்பவர்கள் சுத்தமான பசும்பாலால் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக சக்கோணம் கோலம் போட்டு சரஹணபவ என்று எழுதி ஆறு நெய் தீபங்களை வடக்கு திசை பார்த்தவாறு ஏற்று வைத்து நம்மால் இயலும் பட்சத்தில் 108 முறையாவது சரஹணபவ என்னும் மந்திரத்தை கூற வேண்டும். அபிஷேகம் செய்த தீர்த்தத்தை நம்முடைய தலையிலும் வீட்டிலும் தெளித்துக் கொள்ள வேண்டும். இப்படி கும்பாபிஷேகம் நடக்கக்கூடிய நேரத்தில் நாம் முருகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்வதன் மூலம் முருகப் பெருமானின் அருளை நம்மாளும் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை விளக்கும் துவாதசி வழிபாடு
மனதிற்குள்ளேயே கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தவரை தான் சிவபெருமான் முதலில் ஆட்கொண்டார் என்பதால் நம்மால் நேரில் சென்று கும்பாபிஷேகத்தை தரிசிக்க இயலவில்லை என்றாலும் வீட்டிலேயே இந்த முறையில் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய முருகனின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.