திருஇந்தளூர் அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோவில் சிறப்புக்கள்

திருப்பாற்கடலில் வீற்றிருப்பவர் “ஸ்ரீமன் நாராயணன்”. உலக மக்கள் அனைவருக்கும் வேண்டிய வரங்களை அளிப்பவர். அந்த நாராயணனை வழிபடுவதற்குரிய சிறந்த தினமாக இருப்பது “வைகுண்ட ஏகாதசி” தினமாகும். அந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துரைக்கும் கோவிலாக “திருஇந்தளூர் அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோவில்” இருக்கிறது அக்கோவில் பற்றிய விஷேஷ தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Perumal

திருஇந்தளூர் கோவில் வரலாறு
சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது. சோழர்கால கட்டிடக்கலை கொண்ட கோவிலாக இருக்கிறது. இக்கோவிலின் இறைவனாக பரிமள ரங்கநாதரும், இறைவியாக பரிமள ரங்கநாயகியும் இருக்கின்றனர். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் இது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 26 ஆவது திவ்ய தேசமாக இக்கோவில் இருக்கிறது.

தல புராணங்களின் படி இப்பகுதியை ஆண்ட அம்பரீசன் மன்னன் 100 முறையாக பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருந்து அந்த விரதத்தை முடித்து மிகுந்த பலன்கள் கிடைக்கப்பெறும் நிலையிலிருந்தான். இதையறிந்த தேவர்கள் தங்களுக்கு இணையான ஆற்றலை 100 ஏகாதசி விரதம் முடித்தால் அம்பரீசனுக்கு கிடைத்துவிடும் என்று பயந்து, துர்வாச முனிவரிடம் தங்களுக்காக அம்பரீசனின் ஏகாதசி விரதத்தின் பலன் அவனுக்கு, கிடைக்காமல் செய்யுமாறு வேண்டினர்.

இதையேற்ற துர்வாச முனிவர் அம்பரீசன் ஏகாதசி விரதத்தை முடித்து உணவருந்தும் சமயத்தில் அம்பரீசனின் அரண்மனைக்கு வந்தார். அவரை உபசரித்த மன்னன் அம்பரீசனிடம், தான் ஆற்றில் சென்று நீராடி விட்டு திரும்பியவுடன் இருவரும் சேர்ந்து உணவருந்தலாம் என கூறி சென்றார் துர்வாச முனிவர். குறிப்பிட்ட காலத்திற்குள் உணவருந்தி ஏகாதசி விரதத்தை முடித்து, விரத பலன்களை பெற விரும்பிய அம்பரீசன், தனது நாட்டு வேதியர்களின் அறிவுரை படி உள்ளங்கை அளவு தீர்த்தத்தை குடித்தால் கூட ஏகாதசி பலன்கள் கிடைக்கும் என்று கூற அதன் படியே செய்து ஏகாதசி விரத பலனை பெற்றான். தான் வருவதற்குள் தீர்த்தம் அருந்தி விரதத்தை முடிந்ததால் கோபம் கொண்ட துர்வாச முனிவர், அம்பரீசனை கொல்ல ஒரு பூதத்தை உருவாக்கி அவன் மீது ஏவினார்.

- Advertisement -

தன்னை காப்பாற்றிக்கொள்ள தப்பித்து ஓடிய அம்பரீசன் இந்த திருஇந்தளூர் கோவில் பரிமள ரங்கநாதர் காலில் விழுந்து தன்னை காப்பாற்றுமாறு வேண்டினார். அம்பரீசனுக்காக நேரில் தோன்றிய பெருமாள் துர்வாசர் அனுப்பிய பூதத்தை அடக்கி, துர்வாசரின் கர்வத்தை அடக்கினார். அம்பீரீசனிடம் என்ன வரம் வேண்டும் என பெருமாள் கேட்ட போது தன்னை போன்றே இக்கோவிலுக்கு வந்து வழிபாடும் பக்தர்கள் அனைவரின் குறைகளையும் பெருமாள் தீர்க்க வேண்டும் என கேட்க, அதன்படியே நடக்கும் என அருள் புரிந்தார் பெருமாள்.

இக்கோவிலில் சந்திர புஷ்கரணி இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி சந்திர பகவான் தனது தோஷங்களை நீங்க பெற்றதாக ஐதீகம். இங்குள்ள பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதத்தை சூரியனும், நபிகமலத்தை பிரம்மனும், சிரசை காவேரி நதியும், பாதத்தை கங்கை நதியும் வழிபடுகின்றனர்.

திருஇந்தளூர் கோவில் சிறப்பு

கங்கையை விட காவேரி நதி இத்தலத்தில் புனிதத்தன்மை புனிதத்தன்மை அதிகம் பெறுவதாக கருதப்படுகிறது. இத்தலம் ஏகாதசி விரதத்திற்குரிய தலமாக இருப்பதால் மாத ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் இக்கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு சென்று ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பது அனுபவசாலியான பக்தர்களின் நம்பிக்கை. சந்திர பகவானின் தோஷம் நீங்கிய கோவில் என்பதால் இங்கு வந்து பரிமள ரங்கநாதரையும், ரங்கநாயகி தாயாரையும் வழிபடுபவர்களுக்கு சந்திரனின் தோஷங்கள் நீங்குகிறது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருஇந்தளூர் எனும் ஊரில் அமைந்திருக்கிறது. நாகப்பட்டினம் நகரில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.30 மணி முதல் 11.30 வரையிலும். மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.

கோவில் முகவரி

அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோவில்
திருஇந்தளூர்
நாகப்பட்டினம் – 609 003

தொலைபேசி எண்

4364 – 223 330

இதையும் படிக்கலாமே:
கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணி கோவில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thiruindalur divya desam temple details in Tamil. Thiruindalur Ranganathar temple history in Tamil, Thiruindalur kovil timings, Thiruindalur kovil address, contact number and Thiruindalur kovil varalaru in Tamil is here.