திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை

Thirukkural athikaram 62
- Advertisement -

அதிகாரம் 62 / Chapter 62 – ஆள்வினை உடைமை

குறள் 611:
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

மு.வ விளக்க உரை:
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்,

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

கலைஞர் விளக்க உரை:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்

- Advertisement -

குறள் 612:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு

மு.வ விளக்க உரை:
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

கலைஞர் விளக்க உரை:
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்

Thiruvalluvar

குறள் 613:
தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு

மு.வ விளக்க உரை:
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

கலைஞர் விளக்க உரை:
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்

குறள் 614:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்

மு.வ விளக்க உரை:
முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

கலைஞர் விளக்க உரை:
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை

Thiruvalluvar

குறள் 615:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்

மு.வ விளக்க உரை:
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

கலைஞர் விளக்க உரை:
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்

குறள் 616:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

மு.வ விளக்க உரை:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

கலைஞர் விளக்க உரை:
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்

Thiruvalluvar

குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்

மு.வ விளக்க உரை:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

கலைஞர் விளக்க உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்

குறள் 618:
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி

மு.வ விளக்க உரை:
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

கலைஞர் விளக்க உரை:
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்

Thiruvalluvar

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

மு.வ விளக்க உரை:
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

கலைஞர் விளக்க உரை:
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்

குறள் 620:
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்

மு.வ விளக்க உரை:
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

கலைஞர் விளக்க உரை:
“ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 62 – Thirukkural Aalvinai udaimai in Tamil with meaning or Thirukkural aalvinai udaimai adhikaram in Tamil. It is also called as Thirukkural aalvinai udaimai lyrics or Thirukkural aalvinai udaimai kural in Tamil with meaning.

- Advertisement -