திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை

Thirukkural athikaram 116
- Advertisement -

அதிகாரம் 116 / Chapter 116 – பிரிவு ஆற்றாமை

குறள் 1151:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

மு.வ விளக்க உரை:
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

கலைஞர் விளக்க உரை:
பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்

- Advertisement -

குறள் 1152:
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

மு.வ விளக்க உரை:
அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

கலைஞர் விளக்க உரை:
முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!

Thiruvalluvar

குறள் 1153:
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்

மு.வ விளக்க உரை:
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

கலைஞர் விளக்க உரை:
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; “பிரிந்திடேன்” என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது

குறள் 1154:
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு

மு.வ விளக்க உரை:
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?

கலைஞர் விளக்க உரை:
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?

Thiruvalluvar

குறள் 1155:
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

மு.வ விளக்க உரை:
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

கலைஞர் விளக்க உரை:
காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்

குறள் 1156:
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை

மு.வ விளக்க உரை:
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

கலைஞர் விளக்க உரை:
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்

Thiruvalluvar

குறள் 1157:
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை

மு.வ விளக்க உரை:
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?

கலைஞர் விளக்க உரை:
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!

குறள் 1158:
இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு

மு.வ விளக்க உரை:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

கலைஞர் விளக்க உரை:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது

Thiruvalluvar

குறள் 1159:
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

மு.வ விளக்க உரை:
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?

கலைஞர் விளக்க உரை:
ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!

குறள் 1160:
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்

மு.வ விளக்க உரை:
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.

கலைஞர் விளக்க உரை:
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 111 – புணர்ச்சி மகிழ்தல்

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 116 – Thirukkural Pirivu Aatraamai in Tamil with meaning or Thirukkural Pirivu Aatraamai adhikaram in Tamil. It is also called as Thirukkural Pirivu Aatraamai lyrics or Thirukkural Pirivu Aatraamai kural in Tamil with meaning.

- Advertisement -