திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

Thirukkural athikaram 52
- Advertisement -

அதிகாரம் 52 / Chapter 52 – தெரிந்து வினையாடல்

குறள் 511:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

மு.வ விளக்க உரை:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

கலைஞர் விளக்க உரை:
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்

- Advertisement -

குறள் 512:
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை

மு.வ விளக்க உரை:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

கலைஞர் விளக்க உரை:
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்

Thiruvalluvar

குறள் 513:
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

மு.வ விளக்க உரை:
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

கலைஞர் விளக்க உரை:
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்

குறள் 514:
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

மு.வ விளக்க உரை:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

கலைஞர் விளக்க உரை:
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்

Thiruvalluvar

குறள் 515:
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று

மு.வ விளக்க உரை:
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

கலைஞர் விளக்க உரை:
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது

குறள் 516:
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்

மு.வ விளக்க உரை:
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.

கலைஞர் விளக்க உரை:
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்

Thiruvalluvar

குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்

மு.வ விளக்க உரை:
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

கலைஞர் விளக்க உரை:
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்

குறள் 518:
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

மு.வ விளக்க உரை:
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

கலைஞர் விளக்க உரை:
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்

Thiruvalluvar

குறள் 519:
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு

மு.வ விளக்க உரை:
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.

கலைஞர் விளக்க உரை:
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்

குறள் 520:
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

மு.வ விளக்க உரை:
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கலைஞர் விளக்க உரை:
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 52 – Thirukkural Therinthu vinaiyadal in Tamil with meaning or Thirukkural Therinthu vinaiyadal adhikaram in Tamil. It is also called as Thirukkural Therinthu vinaiyadal lyrics or Thirukkural Therinthu vinaiyadal kural in Tamil with meaning.

- Advertisement -