திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை

Thirukkural athikaram 47
- Advertisement -

அதிகாரம் 47 / Chapter 47 – தெரிந்து செயல்வகை

குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

மு.வ விளக்க உரை:
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

கலைஞர் விளக்க உரை:
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்

- Advertisement -

குறள் 462:
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்

மு.வ விளக்க உரை:
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்
எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

கலைஞர் விளக்க உரை:
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை

Thiruvalluvar

குறள் 463:
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்

மு.வ விளக்க உரை:
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

கலைஞர் விளக்க உரை:
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்

குறள் 464:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்

மு.வ விளக்க உரை:
இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

கலைஞர் விளக்க உரை:
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்

Thiruvalluvar

குறள் 465:
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

மு.வ விளக்க உரை:
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

கலைஞர் விளக்க உரை:
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்

குறள் 466:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

மு.வ விளக்க உரை:
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

கலைஞர் விளக்க உரை:
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

Thiruvalluvar

குறள் 467:
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு

மு.வ விளக்க உரை:
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

கலைஞர் விளக்க உரை:
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு

குறள் 468:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

மு.வ விளக்க உரை:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

கலைஞர் விளக்க உரை:
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்

Thiruvalluvar

குறள் 469:
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

மு.வ விளக்க உரை:
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

கலைஞர் விளக்க உரை:
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்

குறள் 470:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு

மு.வ விளக்க உரை:
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

கலைஞர் விளக்க உரை:
தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 47 – Thirukkural Therinthu seyal vagai in Tamil with meaning or Thirukkural Therinthu seyal vagai adhikaram in Tamil. It is also called as Thirukkural Therinthu seyal vagai lyrics or Thirukkural Therinthu seyal vagai kural in Tamil with meaning.

- Advertisement -