திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

Thirukkural athikaram 48
- Advertisement -

அதிகாரம் 48 / Chapter 48 – வலியறிதல்

குறள் 471:
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்

மு.வ விளக்க உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

கலைஞர் விளக்க உரை:
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்

- Advertisement -

குறள் 472:
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்

மு.வ விளக்க உரை:
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

கலைஞர் விளக்க உரை:
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை

Thiruvalluvar

குறள் 473:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்

மு.வ விளக்க உரை:
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

கலைஞர் விளக்க உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு

குறள் 474:
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

மு.வ விளக்க உரை:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

கலைஞர் விளக்க உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்

Thiruvalluvar

குறள் 475:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

மு.வ விளக்க உரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

கலைஞர் விளக்க உரை:
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்

குறள் 476:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

மு.வ விளக்க உரை:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

கலைஞர் விளக்க உரை:
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்

Thiruvalluvar

குறள் 477:
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

மு.வ விளக்க உரை:
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

கலைஞர் விளக்க உரை:
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்

குறள் 478:
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை

மு.வ விளக்க உரை:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)
விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

கலைஞர் விளக்க உரை:
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை

Thiruvalluvar

குறள் 479:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

மு.வ விளக்க உரை:
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

கலைஞர் விளக்க உரை:
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்

குறள் 480:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

மு.வ விளக்க உரை:
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.

கலைஞர் விளக்க உரை:
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 48 – Thirukkural Vali arithal in Tamil with meaning or Thirukkural Vali arithal adhikaram in Tamil. It is also called as Thirukkural Vali arithal lyrics or Thirukkural Vali arithal kural in Tamil with meaning.

- Advertisement -