ஆரோக்கியம், அறிவாற்றல் மிக்க குழந்தை பிறக்க இக்கோயிலில் வழிபட வேண்டும்

Perumal

அனைவரின் வாழ்விலும் கல்வி என்பது முக்கியம். மிக சிறந்த கல்வி ஒரு மனிதனுக்கு நல் எதிர்காலத்தை தரும். அதே போன்று திருமண வாழ்வில் ஈடுபட்டவர்களுக்கு அறிவும் ஆரோக்கியமும் நிறைந்த குழந்தை பேறு கிடைப்பது முக்கியம். இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு அருள்பவர் இறைவன் ஒருவரே ஆவார். அப்படிப்பட்ட ஒரு இறைவன் வீற்றிருக்கும் தலம் தான் தூப்புல் விளக்கொளி பெருமாள் கோயில். இக்கோயிலின் மேலும் பல சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vishnu

அருள்மிகு விளக்கொளி பெருமாள் கோயில் வரலாறு

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக தூப்புல் பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான திருமால் விளக்கொளி பெருமாள், தீப பிரகாசர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மரகதவல்லி என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தமாகும். புராண காலத்தில் இக்கோயில் திருத்தண்கா என்று அழைக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த இக்கோயில் 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகும்.

தல புராணங்களின் படி சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார். அப்போது இப்பகுதி தர்பைபுல் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால் இப்பகுதி தூப்புல் மற்றும் திருத்தண்கா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. பிரம்ம தேவன் தனக்கு பூலோகத்தில் கோயில் ஏதும் இல்லை என்ற காரணத்திற்காக, சிவபெருமானின் வரம் பெற பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினர். இதற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி இந்த யாகத்தில் இருள் சூழ சாபமிட்டாள். இதனால் மனம் கலங்கிய பிரம்மன் விஷ்ணுவை வணங்க, விஷ்ணுவும் பிரம்மனின் யாகம் தொடர்ந்து நடக்க ஜோதி வடிவாக தோன்றி யாகம் தொடர்ந்து நடக்க செய்தார். டஇதனால் தான் இந்த பெருமாள் விளக்கொளி பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

வைணவ சமய ஆச்சார்யர்களில் ஒருவரான வேதாந்த தேசிகர் அவதரித்த தலம் இந்த தூப்புல் தலமாகும். வேதாந்த தேசிகரின் தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வணங்க, அவரது வேண்டுதலை ஏற்று திருமலையில் ஸ்ரீனிவாசனாக இருக்கும் பெருமாள் தனது வலது கையில் இருக்கும் மணியையே இவருக்கு குழந்தையான வேதாந்த தேசிகராக அவதரிக்க செய்தார் என கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக தான் திருப்பதி திருமலையில் பெருமாளுக்கு பூஜையின் போது மணி அடிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. 1268 ஆம் ஆண்டு பிறந்த வேதாந்த தேசிகர் 1369 வரை நூறாண்டுகள் மேல் வாழ்ந்து வைணவ மத சம்பிரதாயத்திற்கு தனது சேவைகளை ஆற்றினார். இவரது புதல்வர் நயின வரதாச்சாரி இக்கோயிலை முழுவதுமாக கட்டி முடித்தார் என வரலாறு கூறுகிறது. வேதாந்த தேசிகருக்கு இக்கோயிலில் தனி சந்நிதி இருக்கிறது.

அருள்மிகு விளக்கொளி பெருமாள் கோயில் சிறப்புக்கள்

இக்கோயிலின் மூலவர் சந்நிதியின் மேல் இருக்கும் விமானம் ஸ்ரீகர விமானம் என அழைக்கப்படுகிறது. தீப பிரகாசர், லட்சுமி தேவி, ஆண்டாள், ஹயக்ரீவர், கருடன் ஆகியோர்களுக்கு தனி சந்நிதி இக்கோயிலில் இருக்கின்றன. வைகாசி மாதத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் கருடன் இத்தலத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகருக்கு காட்சி தரும் வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

Goddess Saraswathi

அறிவும், ஆரோக்கியமும் நிறைந்த குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள். கல்வியில் குழந்தைகள் சிறந்த நிலையை அடைய விரும்புபவர்கள் இத்தலத்தில் வந்து வணங்கினால் இந்த இரண்டு பேறுகளும் கிட்டும் என்பது பக்தர்களின் கருத்து. பிராத்தனை நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு விளக்கொளி பெருமாள் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தூப்புல் என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 7.30 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு விளக்கொளி பெருமாள் கோயில்
தூப்புல்
காஞ்சிபுரம் மாவட்டம் – 631501

தொலைபேசி எண்

9894443108

இதையும் படிக்கலாமே:
எட்டுமானூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thoopul temple history in Tamil. It is also called as Vilakoli perumal temple in Tamil or Kanchipuram vilakoli perumal in Tamil or Thoopul vedanta desikan in Tamil.