ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு திதியும் ஒரு நட்சத்திரமும் வரும். அதை பொறுத்து அந்த நாளுக்குரிய சிறப்புகள் என்பது உண்டாகும். அதிலும் குறிப்பாக பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அன்று முழுவதும் ஒரே திதி மற்றும் ஒரே நட்சத்திரம் திகழ்கிறது. பொதுவாக ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை ஒரு திதி இருக்கும் பிறகு அதற்கு அடுத்த திதி தொடங்கும்.
அதே போல் தான் நட்சத்திரமும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை ஒரு நட்சத்திரம் இருக்கும் அதற்குப் பிறகு அடுத்த நட்சத்திரம் வரும். ஆனால் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அன்று நாள் முழுவதும் ஒரே திதி மற்றும் ஒரே நட்சத்திரம் வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்தோம் என்றால் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றிகள் உண்டாகும். அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
அனைத்திலும் வெற்றி கிடைக்க
பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தேய்பிறை திருதியை திதி அன்று முழுவதும் இருக்கிறது. அதேபோல் அன்று முழுவதும் உத்திரம் நட்சத்திரம் வருகிறது. உத்திரம் நட்சத்திரம் என்பது சூரிய பகவானுக்குரிய நட்சத்திரமாக திகழ்கிறது. திருதியை திதி என்பது அக்னி பகவானுக்குரிய திதியாக கருதப்படுகிறது. இவர்கள் இருவரையும் நாம் ஒரு சேர அன்றைய தினம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றத்தை பெற முடியும்.
அதிலும் குறிப்பாக குடும்பத்தில் ஒருவர் மட்டும் இந்த வழிபாட்டை செய்தாலே அந்த குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் இந்த பலன் சென்றடையும் என்று கூறப்படுகிறது. படிக்கின்ற பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும், அரசியலில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும், எதிலும் வெற்றி உண்டாகும், நோய்களின் தாக்கம் குறையும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பணவரவு அதிகரிக்கும் என்று நாம் கூறிக்கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 8:30 மணிக்குள் அல்லது 10:30 மணியிலிருந்து 11:30 க்குள் அல்லது 12 30 மணியிலிருந்து 1:30க்குள் அல்லது மாலை 5:30 மணியிலிருந்து இரவு 10:30 மணிக்குள் தங்களுடைய வசதிக்கேற்ப ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு முதலில் நாம் நம்முடைய வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அனைத்து தெய்வ படங்களுக்கும் மலர்களை போட்டு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபத்தை ஏற்றிவிட்டு தனியாக மூன்று அகல் விளக்குகளில் நெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக கோதுமையால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். உணவுப் பொருள் தயார் செய்ய நேரமில்லை என்பவர்கள் வெறும் முழு கோதுமையையோ அல்லது கோதுமை மாவை கூட நாம் நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். பிறகு எப்பொழுது நாம் அந்த பொருட்களை உபயோகப்படுத்துவோமோ அப்பொழுது உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி வைத்து விட்டு நாம் கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு “ஓம் ஆதித்யாய நமஹ” என்னும் மந்திரத்தை 308 முறை கூற வேண்டும். இப்படி சூரிய பகவானை முழுமனதோடு நினைத்து இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்ட வேண்டும். சாம்பிராணி தூபம் போடும் பொழுது வீடு முழுவதும் போட்டுவிட்டு நிலை வாசலுக்கும் சாம்பிராணி தூபத்தை காட்ட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:சொத்து பிரச்சனைக்கு பரிகாரம்
இந்த முறையில் நாளைய தினம் சூரிய பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது சூரிய பகவானின் அருளோடு அக்னி தேவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.