நாம் செய்யக்கூடிய தொழிலிலும் வியாபாரத்திலும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு பூஜை என்றால் அதுதான் ஆயுத பூஜை என்று கூறக்கூடிய சரஸ்வதி பூஜை. அன்றைய நாளில் அனைத்து தொழில் ஸ்தாபனங்களிலும் எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் பலவிதமான நலத்திட்டங்களை செய்து, செய்யக்கூடிய தொழிலில் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் நாம் பூஜை செய்வதன் மூலம் நம்முடைய தொழில் மற்றும் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெறும் என்ற ஒரு நம்பிக்கையும் நிலவுகிறது. இந்த நம்பிக்கை மெய்ப்படுவதற்கும் தொழிலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான முடக்கங்கள் நீங்குவதற்கும் தொழிலில் மேலும் மேலும் முன்னேற்றங்கள் உண்டாவதற்கும் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு முன்பாக செய்ய வேண்டிய சில காரியங்களைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முன்னேற்றம் உண்டாக வழிபாடு
வீட்டிலும் சரி தொழில் செய்யும் இடத்திலும் சரி, நாம் ஒரு பூஜையை செய்ய போகிறோம் என்றால் அந்த பூஜையை செய்வதற்கு முன்பாக வீட்டையும் தொழில் செய்யும் இடத்தையும் சுத்தம் செய்வோம். ஏனென்றால் அந்த இடத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்க வேண்டும் என்பதற்காகவும் பூஜை செய்வதன் மூலம் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல்கள் பெருக வேண்டும் என்பதற்காகவும் தான். அதே வகையில் தான் ஆயுத பூஜை சமயத்திலும் நாம் நம்முடைய வீட்டையும் தொழில் செய்யும் இடத்தையும் சுத்தம் செய்து நமக்கு உதவக்கூடிய பொருட்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்த அலங்காரம் செய்வோம். பிறகு பூஜை செய்வதன் மூலம் தெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற முடியும். ஆனால் ஒவ்வொரு வருடமும் நாம் பூஜை செய்தாலும் நம்முடைய தொழிலில் முடக்கம் வந்து கொண்டே இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஒரு சில சூட்சமமான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவர்களுடைய முடக்கம் முற்றிலும் நீங்கும்.
பொதுவாகவே ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் எதிர்மறை ஆற்றல்கள் என்பது இருக்கும். அந்த இடங்களை நாம் சுத்தம் செய்யும் பொழுது எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கும் என்று கூறுவார்கள். அதன் அடிப்படையில் வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் கிழிந்த, உடைந்த, ஓடாத எந்த பொருட்கள் இருந்தாலும் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் நல்ல நிலையில் இருந்தாலும் உபயோகப்படுத்தாமல் இருக்கக்கூடிய பொருட்கள் என்று சில பொருட்களை நாம் வைத்திருப்போம். அந்த பொருட்களை ஏதாவது ஒரு அறையில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் இருக்கக்கூடிய நான்கு மூலைகளிலும் எதிர்மறை ஆற்றல் என்பது நிறைந்திருக்கும். அந்த எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கு முதலில் அந்த இடத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
நான்கு மூலைகளிலும் சுத்தம் செய்த பிறகு நாட்டு மருந்து கடையில் கோமியம் விற்கும். அதை வாங்கி அந்த மூலைகளில் நன்றாகத் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் பன்னீரை ஊற்றி அதில் பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு நன்றாக கலந்து அதையும் அந்த மூலைகளில் நன்றாக தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். கடைசியாக அந்த மூலைகளில் பேப்பர் கப்பில் கல் உப்பை நிரப்பி வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த இடத்தில் எந்தவித எதிர்மறை ஆற்றலும் உண்டாகாது. இவ்வாறு செய்து முடித்த பிறகு அந்த இடமே தெய்வீகம் நிறைந்த இடமாக மாறுவதற்கு வாசனை மிகுந்த ஊதுபத்தி, சாம்பிராணி தூபம் போன்றவற்றை போட வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய தொழிலில் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டமும் மன கஷ்டமும் தீர துர்க்கை மந்திரம்
நம்மிடமும் நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் விலகினால் தான் நேர்மறை ஆற்றல் நம்மிடம் வந்து சேரும். அந்த வகையில் இந்த முறையில் நம்முடைய தொழில் ஸ்தாபனத்தையும் வீட்டையும் சுத்தம் செய்து பூஜை செய்ய அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.