ஆடி மாதமே சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி வெள்ளி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் இந்த வருடம் ஆடி மாதத்தில் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது. பொதுவாக ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு என்றாலும் முதல் வெள்ளிக்கிழமையும், மூன்றாவது வெள்ளிக்கிழமையும், ஐந்தாவது வெள்ளிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்ற வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்யாவிட்டாலும் ஆடி முதல் வெள்ளியில் வழிபாடு செய்வது என்பது மிகுந்த பலனை தரக்கூடியதாகவே திகழ்கிறது. அந்த வகையில் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதற்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமை பெண்கள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆடி வெள்ளி வழிபாடு
வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்களும் ஆதிசக்திக்கு இணையானவர் என்று புராணங்கள் கூறுகின்றது. அதேபோல் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்களும் மகாலட்சுமியாக பாவிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த வீட்டில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த வீட்டில் அனைத்து தெய்வங்களும் குடியிருப்பார்கள். அதிலும் குறிப்பாக மகாலட்சுமி தன்னுடைய பரிபூரணமான அருளை தருவாள் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த பெண்கள் மறவாமல் ஆடி வெள்ளிக்கிழமை இந்த ஒரு வழிபாட்டை செய்ய தங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது உறுதி.
ஜூலை மாதம் 18ஆம் தேதி ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் பொழுது பெண்கள் கண்டிப்பான முறையில் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும். அன்றைய தினம் புடவை அணிந்து, நெற்றியில் திலகமிட்டு, கைகளில் வளையல், கால்களில் கொலு அணிந்துக் கொண்டு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த முறையில் பெண்கள் பூஜை செய்யும் பொழுது அந்த பூஜையின் பலனை முழுமையாக பெற முடியும். இயண்றவர்கள் கையில் மருதாணியை வைத்துக் கொண்டு பூஜை செய்யலாம்.
முதலில் வீட்டில் இருக்கக்கூடிய துளசி மாடத்தை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து மஞ்சள் தடவி கோலம் போட்டு தீபம் ஏற்றி வைத்து ஊதுபத்தி சாம்பிராணி அனைத்தும் காட்ட வேண்டும். பிறகு நேராக வீட்டு பூஜை அறைக்கு வந்து சுவாமி படங்கள் அனைத்திற்கும் மலர்களை சாற்றி ஒரு சிறிய சொம்பு நிறைய தண்ணீரை பிடித்து வைத்து உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு குலதெய்வத்தின் பெயரை 108 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு அந்த சொம்பில் இருக்கக்கூடிய தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய அனைவருக்கும் பருகுவது தீர்த்தமாக தர வேண்டும். அன்றைய தினம் காலையிலேயே பாசிப்பருப்பு பாயாசம் செய்து நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்து விட்டு அதை வீட்டில் இருக்கக் கூடிய அனைவருக்கும் தர வேண்டும்.
மாலை நேரத்தில் வீட்டு பூஜை அறையிலும் நிலை வாசலிலும் தீபம் ஏற்றி வைத்து வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரின் கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய அம்மனின் படத்திற்கு 108 அம்மன் போற்றிகளை கூறி குங்குமத்தாலோ அல்லது மலர்களாலோ அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த முறையில் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை செய்யலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்ய இயலாது என்பவர்கள் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையாவது இந்த வழிபாட்டை செய்ய தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும், கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் தங்களை விட்டு விலகிச் செல்லும்.
இதையும் படிக்கலாமே: பக்தி என்றால் என்ன?
மகாலட்சுமி தாயாரின் அருளையும், அம்மனின் அருளையும் பரிபூரணமாக பெற்று குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்குவதற்கு இந்த எளிமையான ஆடி வெள்ளி பூஜையை பெண்கள் செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.