துருப்பிடித்த இரும்பு கடாய் அல்லது தோசை கல் எளிதாக புதியது போல சுத்தம் செய்வது எப்படி? இப்படி செஞ்சா மீண்டும் மொறுமொறு தோசை சுடலாமே!

dosa-kal
- Advertisement -

துருப்பிடித்த இரும்பு கடாய் அல்லது தோசை கல் உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக பயன்படாமல் இருந்தால் இந்த முறையில் ரொம்பவே எளிதாக சுத்தம் செய்து புதியது போல மாற்றி விடலாம். இரும்பு கடாய், இரும்பு தோசைக்கல் போன்ற இரும்பு சார்ந்த பாத்திரங்கள் ரொம்ப எளிதாக துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். அடிக்கடி தண்ணீரில் கழுவுவதால் இது போல துரு பிடிக்கிறது. இதை நீண்ட நாட்கள் அப்படியே போட்டு வைத்து விட்டால் ரொம்பவும் மோசமாக துருப்பிடித்திருக்கும். எப்படிப்பட்ட மோசமான துரு கரையையும் சுலபமாக நீக்கக்கூடிய வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

துருப்பிடித்த இரும்பு தோசைக்கல் இருந்தால் முதலில் அதை அடுப்பில் வைத்து காய விடுங்கள். தோசை கல் நன்கு காய்ந்ததும் குறைந்த தீயில் அடுப்பை மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை எடுத்து அதன் மீது தூவுங்கள். பின்னர் ஒரு மூடி எலுமிச்சை பழத்தை முழுதாக பிழிந்து கொள்ளுங்கள். அந்த எலுமிச்சை பிழிந்த மூடியை வைத்தே நன்கு பரபரவென்று தேயுங்கள். அடுப்பின் சூட்டிலேயே உப்பை வைத்து எலுமிச்சை சாறுடன் தேய்ப்பதால் துரு கரை முழுவதுமாக நீங்கிவிடும்.

- Advertisement -

ஒரு 5 லிருந்து 10 நிமிடம் வரை இது போல துரு இருக்கும் எல்லா இடங்களிலும் அடுப்பில் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு தோசை கல்லை கீழே திருப்பி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் பின்புறமும் இதே போல உப்பை தூவி எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு தேய்த்தால் பின்புறம் இருக்கும் துருக்கரையும் நீங்கிவிடும். அதன் பிறகு தோசை கல்லை தண்ணீரில் நன்கு ஒரு முறை கழுவி கொள்ளுங்கள்.

பின்னர் மீண்டும் இதே போல ஒருமுறை உப்பை தூவி எலுமிச்சை சாறு விடாமல் மூடியை கொண்டு நன்கு தேய்த்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் துரு கரையும் அகன்று விடும். அதன் பிறகு இரும்பு நார் கொண்டு நன்கு தேய்த்தால் புத்தம் புதியதாக மாறிவிடும். அதன் பிறகு சமையல் எண்ணெயை நன்கு எல்லா இடங்களிலும் தடவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுநாள் அந்த எண்ணெயை துடைக்காமல் அப்படியே அரிசி வடித்த கஞ்சி தண்ணியை ஊற்றி ஊற விடுங்கள். ஒரு நாள் முழுவதும் கஞ்சி தண்ணி அப்படியே சூடாக இருக்கட்டும். பிறகு மறுநாள் ஒருமுறை தண்ணீரில் நன்கு அலசி விட்டு இதே போல எண்ணெய் தடவி வைத்து விடுங்கள். பிறகு நீங்கள் தோசை வார்த்தால் மொறு மொறு என்று பழையபடி உங்களுடைய தோசைக்கல் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

இதே முறையில் தான் நீங்கள் இரும்பு சார்ந்த பொருட்கள் அல்லது இரும்பு கடாய் போன்றவற்றையும் அடுப்பில் வைத்து உப்பு தூவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு எண்ணெய் தடவி வைத்து பயன்படுத்தினால் பழையபடி அதை உபயோகப்படுத்தும் படி மாறிவிடும். பெரும்பாலும் இரும்பு சார்ந்த இந்த மாதிரியான பொருட்களை அடிக்கடி இரும்பு ஸ்கிரப்பர் பயன்படுத்தி தேய்க்க கூடாது. சாதாரண ஸ்கிரப்பரால் தேய்த்து தண்ணீரில் அலசி எடுத்து வைக்க வேண்டும். எண்ணெய் தடவி வைத்தால் நீண்ட நாட்களுக்கு துருப் பிடிக்காமல் அப்படியே இருக்கும், இதையும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -