கலவை சாதத்துக்கு சட்டுனு துவரம் பருப்பு துவையல் இப்படி செஞ்சு பாருங்க இதை விட பெஸ்ட் சைடிஷ் இருக்கவே முடியாது!

paruppu-thogaiyal-thuvaiyal
- Advertisement -

எல்லா வகையான கலவை சாதத்திற்கும் ரொம்பவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த பருப்பு துவையல் செய்வதும் ரொம்பவும் எளிதாக இருக்கும். தேங்காய் எல்லாம் போட்டு செய்வதால், இதன் ருசி அபரிமிதமாக இருக்கப் போகிறது. கலவை சாதம் மட்டும் அல்லாமல் டிபன் வகைகளுக்கும், சூடான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள அவ்வளவு அருமையாக இருக்கும், இந்த துவரம் பருப்பு தேங்காய் துவையல் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

துவரம் பருப்பு துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – ரெண்டு டீஸ்பூன், துவரம் பருப்பு – ரெண்டு கைப்பிடி, பூண்டு பல் – மூன்று, மிளகாய் வற்றல் – 7, சீரகம் – கால் ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, துருவிய தேங்காய் – ஒரு கப், கருவேப்பிலை – இரண்டு இணுக்கு, பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

துவரம் பருப்பு துவையல் செய்முறை விளக்கம்:
முதலில் துவரம் பருப்பு துவையல் செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். துவையல் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் ரொம்பவும் நல்லது. இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு லேசாக காய விடுங்கள். நல்லெண்ணெய் புகை வர காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு இரண்டு கைப்பிடி அளவிற்கு துவரம் பருப்பை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் எவ்வளவு துவையல் அரைக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு பருப்பை கூட, குறைய சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெயின் சூட்டிலேயே பருப்பை நன்கு வறுக்க வேண்டும். துவரம் பருப்பு பொன்னிறமாக வறுபடும் முன், மூன்று என்ற எண்ணிக்கையில் பூண்டை உரித்து சேர்த்து வதக்குங்கள். பின்னர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் வற்றலை சேர்க்க வேண்டும். உங்கள் காரத்திற்கு தகுந்தார் போல் ஐந்து அல்லது ஏழு வரை வற்றலை காம்பை கிள்ளி சேர்த்து வதக்கி விடுங்கள்.

- Advertisement -

பின்னர் கால் ஸ்பூன் அளவிற்கு மட்டும் சீரகம் சேர்த்து வதக்குங்கள். துவையலுக்கு புளி தான் பிரதான பொருள் ஆகும். புளி சிறு நெல்லிக்காய் அளவிற்கு விதைகள், நார்கள் எல்லாம் நீக்கி உருட்டி எடுத்து சேர்த்து வதக்கி விடுங்கள். எல்லாம் நன்கு சிவக்க வறுபட்டதும், ஒரு கப் அளவிற்கு துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். தேங்காய் துருவல் சேர்த்ததும் ரெண்டு கொத்து கருவேப்பிலையை நன்கு கழுவி உருவி சேர்த்து வதக்கி விடுங்கள்.

ஓரளவுக்கு தேங்காய் சுருண்டு வதங்கியதும், பெருங்காயத்தூள் சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து எல்லா பொருட்களையும் ஆற வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ரொம்பவும் கெட்டியாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரையுங்கள். அரைப்படவில்லை என்றால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை தாளித்து அல்லது தாளிக்காமல் எப்படி வேண்டுமானாலும் நாம் வைத்துக் கொள்ளலாம். சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இது அவ்வளவு அருமையான துவையலாக இருக்கும். எல்லா வகையான கலவை சாதங்களுக்கும் ஏற்றது. நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -