குரோதி வருடத்தின் கடைசி நாளும் பங்குனி மாதத்தின் கடைசி நாளுமான ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி திகழ்கிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடானது அந்த வருடத்தில் நாம் அனுபவித்த கஷ்டங்களை மீண்டும் அனுபவிக்காமல் இருப்பதற்கும் பிறக்கக்கூடிய புதுவருடம் நல்லவிதமாக பிறப்பதற்கும் உதவி புரியும். அந்த வகையில் வருடத்தின் கடைசி நாள் அன்று துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
துயரங்களை விலக்கும் தீபம்
எந்த ஒரு வருடப் பிறப்பாக இருந்தாலும் வருடத்தின் முதல் நாளன்று பலரும் தங்களுடைய குலதெய்வ ஆலயத்திற்கு அல்லது இஷ்ட தெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்களின் அருளால் அந்த வருடம் நமக்கு சிறப்பான வருடமாக அமையும் என்ற ஒரே எண்ணம் தான். அப்படி சிறப்பான வருடமாக அமைவதற்கு எப்படி வருடத்தின் முதல் நாள் அன்று வழிபாடு செய்கிறோமோ அதே போல் அதற்கு முந்திய வருடத்தின் கடைசி நாள் அதாவது முந்தைய நாள் அன்றும் நம் வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி வழிபாடு செய்வதன் மூலம் அந்த வருடம் நம் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே கஷ்டங்களும் துன்பங்களும் நீங்க வேண்டும் என்றால் அதற்கு நாம் துர்க்கை அம்மை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தின் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பங்குனி மாதத்தின் 30 ஆம் நாளும் குரோதி வருடத்தின் கடைசி நாளுமான அன்று நாம் துர்க்கை அம்மனை இந்த முறையில் வீட்டிலேயே வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய துயரங்கள் அனைத்தும் நீங்கும். புதுவருடம் சிறப்பான வருடமாக அமையும்.
இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:00 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் செய்துவிட வேண்டும். இதை நம்முடைய வீட்டு பூஜை அறையில் தான் செய்ய வேண்டும். இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடித்தமான கனியாக திகழ்வதுதான் எலுமிச்சம்பழம். ஒரு நல்ல எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை இரண்டாக நறுக்கி அதன் சாறு அனைத்தையும் அந்த தட்டில் பிழிந்து விட்டுக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழத்தின் தோலை நாம் தூக்கிப் போட்டு விடலாம். இப்பொழுது அந்த தாம்பாள தட்டி நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். அதாவது எலுமிச்சம் பழச்சாறிற்கு மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுவது போல் இது இருக்கும்.
அந்த தீபத்தில் துர்க்கை அம்மனை நாம் முழுமனதோடு மனமாற தரிசனம் செய்து துர்க்கை அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை 11 முறை கூறவேண்டும். இப்படி கூறுவதற்கு முன்பாக நம்மால் இயன்ற ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மந்திரத்தை கூறி முடித்த பிறகு தீப தூப ஆராதனை காட்டி நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் இந்த கடைசி நாளோடு சென்று விட வேண்டும், புதிதாக பிறக்கக்கூடிய புதுவருடன் சிறப்பான வருடமாக அமைய வேண்டும் என்று துர்க்கை அம்மனிடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு தீபத்தை குளிர வைத்து மறுநாள் காலையில் இந்த சாறை எடுத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.
மந்திரம்
“ஓம் தேவி துர்க்கை போற்றி”
இதையும் படிக்கலாமே:நவகிரக பாதிப்பை நீக்கும் பௌர்ணமி தீபம்
சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய துர்க்கை அம்மனை வீட்டிலேயே வருடத்தின் கடைசி நாள் அன்று இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.