இட்லி தோசைக்கு இந்த சட்னியை மட்டும் அரைச்சு பாருங்க! வேறு எந்த சட்னியையும் அரைக்கவே மாட்டீங்க! 10 நிமிடத்தில் சூப்பர் சட்னி ரெசிபி.

verkadalai-chutney

இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஒரே மாதிரி சட்னி அரைத்து சலித்து போய் விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த சட்னியை அரைத்துப் பாருங்கள். இந்தச் சட்னி அரைக்க வெங்காயம் கூட தேவையில்லை. புதுமையான சுவையில் காரசாரமான சட்னியை எப்படி தயார் செய்வது? அதுவும் வெறும் பத்தே நிமிடத்தில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

kara-chutney

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 1 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் சீரகம் -1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 2, பச்சை மிளகாயை – 1, சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக 2 கைப்பிடி அளவு தேங்காய் துருவலை போட்டு, 30 வினாடிகள் வதக்கி அடுப்பை அணைத்து, இந்தக் கலவையை ஒரு தட்டில் மாற்றி அப்படியே ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஆரட்டும்.

tomato

மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் மீடியம் சைஸ் பழுத்த 3 தக்காளிகளை வெட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த தக்காளியோடு சட்னிக்கு தேவையான உப்பு, பெரிய நெல்லிக்காய் அளவு புளி, சேர்த்து நன்றாக ஒருமுறை கலந்து விட்டு, மூடி போட்டு 4 லிருந்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் தக்காளியை வேக வைக்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து பச்சை வாடை நீங்கி தொக்கு பதத்திற்கு வந்து இருக்கும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய், சேர்த்து வதக்கிய கலவையை சேர்த்து முதலில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அதன் பின்பு வதக்கியை தக்காளி மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் சேர்க்காமல் வெறும் தக்காளி தேங்காய் சேர்த்து அரைத்த சட்னி மிக மிக சுவையாக வித்தியாசமாக இருக்கும்.

இந்தச் சட்னியை மிக்ஸி ஜாரில் இருந்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கெட்டிப் பதத்தில் தான் சட்னியை கரைக்க வேண்டும். இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து போட்டால் சூப்பரான சட்னி தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.