மிக்ஸியில் மாவு அரைத்து மிக மிக சுலபமாக ஒரு கார தோசை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் துவரம்பருப்பு சேர்த்து காரசாரமாக இந்த கார தோசையை செய்வதால் காலை உணவுக்கு நிறைவானதாக இருக்கும். இந்த தோசைய ஒரு முறை சுட்டு ருசி பார்த்துவிட்டால் சாதாரண தோசையை சாப்பிடவே பிடிக்காது. அந்த அளவிற்கு சுவையான ஒரு கார தோசை ரெசிபி உங்களுக்காக.

முதலில் கார தோசை செய்வதற்கு தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். இட்லி அரிசி – 1 கப், துவரம்பருப்பு – 1/4 கப், உளுந்து – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், நீர் மோர் 1 1/2 கப், இந்த மோர் தண்ணீர் போலவே இருக்க வேண்டும். அரிசியை எந்த கப்பில் அளக்கிறீர்களோ துவரம் பருப்பையும் அதே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு 3 முறை நன்றாகக் கழுவி விடுங்கள். கழுவிய இந்த பொருட்களை மோர் ஊற்றி குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு இரவு முழுவதும் இந்த பொருட்களையெல்லாம் மோர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளலாம்.

மாவு அரைப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு 5 லிருந்து 6 வர மிளகாய்களை சுடுதண்ணீரில் போட்டு ஊறவைத்துக் கொள்ளுங்கள். (உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயை கூட்டவும் குறைக்கவும் செய்துகொள்ளலாம்).
அரிசியும் பருப்பும் மோரில் நன்றாக ஊறிய பின்பு, இதை மிக்ஸி ஜாரில் போட்டு, இதோடு சீரகம் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, சுடுதண்ணீரில் ஊற வைத்திருக்கும் வரமிளகாய், இந்த பொருட்களையும் சேர்த்து அரிசி பருப்பை ஊற வைத்த மோரை ஊற்றி இந்த மாவை அரைக்க வேண்டும். தேவையான அளவு மோர் ஊற்றி மாவை அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தோசை மாவு கொரகொரப்பாக ரவை பக்குவத்திற்கு, அரைபட வேண்டும். மொழுமொழுவென அறைந்துவிட்டால் தோசை மொறு மொறு வென வராது. (தண்ணீர் ஊற்றி அரைக்கும் பக்குவமும் தோசை மாவு பக்குவத்திற்கு தான் இருக்கவேண்டும்.)

இந்த மாவை வைத்து உடனடியாகவும் தோசை சுடலாம். அப்படி இல்லை என்றால் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் மாவை புளிக்க வைத்தும் தோசை சுடலாம். ஏற்கனவே இந்த மாவை மோரில் ஊற வைத்து இருக்கின்றோம் அல்லவா. ஆகவே புளிக்காத மாவில் தோசை செய்தாலும் தோசை சுவையாக தான் வரும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும், தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து விட்டு, இந்த மாவை எடுத்து தோசைக்கல்லின் மேலே எப்போதும் அரிசி மாவு தோசை ஊற்றுவது போல ஊற்றி மெல்லிசாக தேய்த்து தேவைக்கு ஏற்ப நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென சுட்டு எடுத்து பரிமாறவும். தேங்காய் சட்னி அல்லது சாம்பார் எதை வேண்டுமென்றாலும் சைடிஷ்ஷாக வைத்துக்கொள்ளலாம். சாதாரண தோசையை விட இந்த துவரம்பருப்பு கார தோசை மிக மிக அற்புதமான சுவையில் இருக்கும். ஒரு முறை மிஸ் பண்ணாம உங்க வீட்லயும் இந்த தோசை ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.