முந்தைய காலங்களில் வீட்டிற்குள் நாம் பயன்படுத்திய தண்ணீரில் உப்பு இல்லாமல் இருந்தது. இதனால் உப்பு கரையை பார்ப்பது என்பது அரிதாக இருந்து வந்தது. அது மட்டும் அல்லாமல் டைல்ஸ் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அவ்வளவாக அந்த காலங்களில் பயன்படுத்தப்படவில்லை. பித்தளை பக்கெட்டுகள், அலுமினிய பக்கெட்டுகள் மற்றும் சாதாரண சிமெண்ட் தரை, சிமெண்ட் சுவர் கொண்ட வீடுகள் தான் அதிகம் இருக்கும், எனவே உப்பு கரையை போக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று எல்லோருடைய வீடுகளிலும் வரும் தண்ணீரானது மிகுந்த உப்பாக இருக்கிறது.
இந்த உப்பு கலந்த நீரை தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் அல்லது தொடர்ந்து ஒரு இடத்தில் பயன்படுத்திக் கொண்டே இருந்தால், அந்த இடத்தில் நாளடைவில் உப்பு படிமங்கள் படிந்து வெள்ளை வெள்ளையாக அசிங்கமாக காட்சியளிக்கும். அதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால் அதன் மேல் அழுக்குகள் படிந்து நாளடைவில் பாசி பிடித்தது போல ரொம்பவும் அழுக்காக மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். எனவே இந்த உப்பு கரையை ரொம்ப சுலபமாக ஐந்து நிமிடம் கூட எடுக்காமல் எப்படி சுத்தம் செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சமையலறையில் பாத்திரம் கழுவும் இடத்தில் கூட நீர் குழாய்க்கு பின்புறம் இருக்கும் டைல்ஸ் மற்றும் நீர் குழாய்களில் கூட உப்பு கரை அதிகம் படிந்து காணப்படும். பாத்திரம் தேய்க்கும் தண்ணீரானது டைல்ஸ் மீது தெளிப்பதால் இது போல உப்பு படிமங்கள் படிந்து நாளடைவில் உப்பு கரையாக மாறி விடுகிறது.
இதே போல குளியலறையில் பயன்படுத்தும் பக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் எடுத்து ஊற்ற பயன்படுத்த மக் போன்றவற்றில் கூட நாளாக நாளாக தண்ணீர் ஊறி ஊறி உப்பு படிமங்கள் படிந்து வெள்ளையாக இருக்கும். அது வெள்ளையாக இருக்கும் பொழுதே நீங்கள் இதை செய்து பார்த்தால் ரொம்பவும் சுலபமாக கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் நீக்கி விடலாம்.
உப்பு கரையை போக்கக்கூடிய அதி அற்புதமான ஆற்றல் புளித்த இட்லி மாவுக்கு உண்டு. நன்கு புளித்து மீந்து போன இட்லி மாவு உங்களிடம் இருந்தால் அதை உப்பு கரை இருக்கும் இடங்களில் எல்லாம் தடவி விட வேண்டும். அதற்கு முன்பாக புளித்த இட்லி மாவுடன் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு விம் லிக்விட் அல்லது டிடர்ஜென்ட் லிக்விட் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். துணி துவைக்கும் பவுடர் கூட பயன்படுத்தலாம். இதை நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு உப்பு படிந்த இடங்களில் முழுவதுமாக ஒரு இடம் விடாமல் தேய்த்து ஊற விட்டு விடுங்கள். ஒரு அரை மணி நேரம் ஊறிய பிறகு இரும்பு ஸ்கிரப்பர் கொண்டு லேசாக தேய்த்து விட்டால் போதும், உப்பு கரை அப்படியே உதிர்ந்து வந்துவிடும். அவ்வளவுதான் அந்த இடம் முந்தைய நிலையில் புத்தம் புதியதாக மாறிவிடும். புதிய பக்கெட் வாங்கும் பொழுது எப்படி இருந்ததோ, அந்த அளவிற்கு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் மின்ன ஆரம்பித்து விடும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.