உளுந்து மாவில் ‘கீரை வடை’ 10 நிமிடத்தில் இப்படி கூட செய்யலாமா? ஒரு முறை செய்தாலே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்!

- Advertisement -

வடை என்றதும் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ‘உளுந்த வடை’ தான். உளுந்த வடை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எப்பொழுதும் ஒரே போல உளுந்த வடை செய்வதைக் காட்டிலும் புதுமையான முறையில் ஆரோக்கியத்துடன் கூடிய ‘கீரை உளுந்த வடை’ செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? மசால் வடையில் கீரை போட்டு செய்வதை நாம் பார்த்திருப்போம். உளுந்து வைத்து எப்படி கீரை வடை செய்வது? அதிக எண்ணெய் குடிக்காமல் பத்தே நிமிடத்தில் வித்தியாசமான சுவையில் எல்லோரும் விரும்பும் வகையிலான ‘உளுந்த கீரை வடை’ செய்யும் முறையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ulundhu

‘உளுந்த கீரை வடை’ செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – 1/4 கிலோ
பச்சரிசி மாவு – 4 டீஸ்பூன்
சோடா உப்பு – சிட்டிகை அளவு
வெங்காயம் – 1/2 கப்

- Advertisement -

கீரை – 1 கப்
மல்லித்தழை – 1/4 கப்
கறிவேப்பிலை – 1/4 கப்
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3

ulunthu-keerai-vadai1

‘உளுந்த கீரை வடை’ செய்முறை விளக்கம்:
கால் கிலோ உளுத்தம் பருப்பை ஒன்றிரண்டு முறை நல்ல தண்ணீரில் நன்கு அலசி குறைந்தது ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் கழிந்த பின்பு தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுங்கள். தண்ணீர் தேவை என்றால் ஸ்பூன் அளவிற்கு சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாக மாவு பந்து போல் வருமளவிற்கு அரைத்து எடுக்க வேண்டும். மாவு அரைத்து எடுக்கும் பக்குவத்தில் தான் வடை அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்த மாவை 10 நிமிடம் ஊற விடவும். பின்னர் அதனுடன் சிறிதளவு சோடா உப்பு மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். வடை கிரிஸ்பியாக வருவதற்கு பச்சரிசி மாவு 4 டீஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகள், வெங்காயம், நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, மல்லித்தழை, பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்கள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதில் சேர்க்கப்படும் கீரை சிறுகீரை, பாலக்கீரை, அரைக்கீரை என்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு கீரை வகையை நன்கு அலசி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதனையும் இவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ulunthu-keerai-vadai3

அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். இதே பக்குவத்தில் வடைகளை போட்டு எடுக்கும் பொழுது வடை உள்ளேயும், வெளியேயும் நன்கு வேகும். அடுப்பை கூடவோ, குறைக்கவோ செய்தால் சரியாக வராது. பின்னர் மாவை எடுத்து உருண்டையாக்கி நடுவில் ஓட்டை போட்டு கொதிக்கும் எண்ணெயில் சேர்த்து இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், அட்டகாசமான சுவையுடன் கூடிய புதுமையான ‘உளுந்த கீரை வடை’ தயார். ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும், புதுமையான சுவையிலும் இருக்கும் இந்த உளுந்த கீரை வடை செய்து நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களை அசத்தி விடுங்கள்.

- Advertisement -