வழக்கமாக காலை, மாலை உணவாக இட்லி, தோசை தான் அனைவரது வீட்டிலும் இருக்கும். இப்படி இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சைட் டிஷ்ஷாக பல வகை சட்னிகள் செய்யப்படுகிறது. தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி என பல வகையானவை செய்து கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பல வகைகள் இருந்தாலும் என்றாவது ஒருநாள் இப்படி உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சட்னியையும் செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாகவும் சாப்பிடுவார்கள், அவர்கள் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும். அவ்வாறு வாழைப்பூ வைத்து மிகவும் சுவையான சட்னி செய்ய முடியும் என்று சொன்னால் அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். வாழைப்பூவில் வடை செய்யலாம், பொரியல் செய்யலாம் ஆனால் இப்பொழுது வாழைப்பூ சட்னி செய்ய போகிறோம். வாருங்கள் இந்த வாழைப்பூ சட்னி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – ஒரு கைப்பிடி, வேர்கடலை – நான்கு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 2, பூண்டு – 10 பல், வர மிளகாய் – 5, கறிவேப்பிலை – இரண்டு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, அதில் உள்ள நரம்பு போன்ற பகுதியை மட்டும் நீக்கி விட்டு, வாழைப்பூவை தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிறகு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் வேர்க்கடலையையும் தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் வேர்க்கடலை மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதன்பின் 3 வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு தோல் உரித்து வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் இவற்றுடன் வாழைப்பூவை சேர்த்து வதக்கவேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு, இவற்றை நன்றாக ஆற வைத்து ,மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் கலந்துவிட வேண்டும்.