வாழைப்பூவில் கோலா உருண்டையா? அதை எப்படி செய்வது? நாவூறும் சுவையில் அருமையான வாழைப்பூ கோலா உருண்டை ரெசிபி எளிதாக எப்படி வீட்டில் தயாரிப்பதுன்னு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

valaipoo-kola-urundai1_tamil
- Advertisement -

கோலா உருண்டை என்றாலே நமக்கு நான்வெஜ் தான் ஞாபகம் வரும். ஆனால் வாழைப்பூவில் அதைவிட அருமையான சுவையில் அற்புதமான கோலா உருண்டை எப்படி தயாரிப்பது? வாழைப்பூ நிறைய நன்மைகளை உடலுக்கு செய்யக்கூடியது. இதை பொரியல், கூட்டு வைத்து சாப்பிட சிரமப்படுபவர்கள், இது போல ருசியான கோலா உருண்டை செய்து சாப்பிட்டு பாருங்க, ஒரு உருண்டை கூட மிஞ்சாது. இன்னும் வேண்டும் என்று கேட்கத் தூண்டும். அந்த அளவிற்கு டேஸ்டியான இந்த ஆரோக்கியமான வாழைப்பூ கோலா உருண்டை ரெசிபி எப்படி தயாரிப்பது? என்பதை தொடர்ந்து காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

வாழைப்பூ – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, பட்டை – 2, கிராம்பு – 2, சோம்பு – முக்கால் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீ ஸ்பூன், துருவிய தேங்காய் – ஒரு மூடி, பொட்டுக்கடலை மாவு – அரை கப், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, நறுக்கிய மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவிற்கு.

- Advertisement -

செய்முறை

வாழைப்பூவில் கோலா உருண்டை செய்ய முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வாழை பூக்களை பிரித்தெடுத்து அதில் உள்ள நரம்பை எல்லாம் நீக்கிவிட்டு தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் போல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள்.

நன்கு வெந்து வந்த பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்சர் ஜாரை கழுவி எடுங்கள். அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வாசனைக்கு பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து துருவிய தேங்காயையும் போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் கடைசியாக வேக வைத்து எடுத்து வைத்துள்ள வாழைப்பூவையும் சேர்த்து மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து விடாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்து வாருங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதுடன் அரைக்கப் அளவிற்கு பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி நிறைய மல்லித்தழைகளை நன்கு சுத்தம் செய்து நறுக்கி சேருங்கள்.

இதையும் படிக்கலாமே:
மதுரை முனியாண்டி விலாஸ் கார சட்னியின் ரகசியம் இதுதாங்க. இப்படி ஒரு கார சட்னியை இதுவரைக்கும் வாழ்நாளில் நீங்க ருசித்து இருக்கவே மாட்டீங்க.

பின்னர் எல்லாவற்றையும் நன்கு கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லா உருண்டைகளையும் உருட்டிய பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். பொரிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு மீடியம் ஃப்ளேமில் வைத்து பொறுமையாக உள்ளே நன்கு வேகும்படி சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ரொம்ப டேஸ்டியான இந்த வாழைப்பூ கோலா உருண்டை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணுங்க, எல்லோருமே விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவாங்க!

- Advertisement -