பஜ்ஜி மாவு இல்லாமல் டீக்கடை பஜ்ஜி போலவே ‘மொரு மொரு பஜ்ஜி’ வீட்டிலேயே எப்படி செய்வது? இப்படி பஜ்ஜி சுட்டால் சலிக்காமல் எவ்வளவுனாலும் சாப்பிடலாமே!

bajji

மாலையில் டீயுடன் ரெண்டு பஜ்ஜி கொடுத்தால் போதும்! டின்னர் கூட வேண்டாம் என்று சொல்பவர்கள் உங்களில் நிறைய பேர் இருக்கலாம். அந்த அளவிற்கு பஜ்ஜி அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்னாக் வகையாகும். சுடசுட பஜ்ஜியும், டீயும் சாப்பிடும் பொழுது நம்மை அறியாமலேயே, அடடே! என்று கூறி விடுவதும் உண்டு. ஆனால் இந்த பஜ்ஜியை கடையில் வாங்கி சாப்பிட்டால் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கும்? என்பது கேள்விக்குறிதான். எண்ணெயில் பொரிக்கும் பொருட்கள் பெரும்பாலும் பழைய எண்ணெய்யை பயன்படுத்தியே செய்யப்படுகிறது.

bajji1

இதனால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதால் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. சரி பஜ்ஜி மாவு இருந்தால் தான் பஜ்ஜி சுட முடியுமா என்ன? முன்பெல்லாம் பஜ்ஜி மாவு வைத்தா பஜ்ஜி சுட்டார்கள்? வீட்டில் பஜ்ஜி மாவு இல்லை, என்ன செய்வது? டீக்கடை பஜ்ஜி போலவே மொரு மொருன்னு க்ரிஸ்பியான சூப்பரா பஜ்ஜியை வீட்டிலேயே எப்படி செய்வது? அதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பஜ்ஜி என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பெண் பார்க்கும் படலம் தான். பெண் பார்க்க வந்தாலே பஜ்ஜி சுட வேண்டுமென்று யார் சாஸ்திரம் வகுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதை அந்த காலம் முதல் இந்தக் காலம் வரை தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள். பஜ்ஜி சரியாக இல்லை என்றால் அந்த வீட்டில் எப்படி பெண் எடுப்பார்கள்? அதனால் பஜ்ஜியை சூப்பராக சுட கற்றுக் கொள்வோமா?

bajji2

பஜ்ஜி போட தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு,

- Advertisement -

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,
வாழைக்காய் – 1,
நெய் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவிற்கு
எண்ணெய் – தேவையான அளவிற்கு.

valakkai

டீக்கடை பஜ்ஜி செய்முறை விளக்கம்:
முதலில் வாழைக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோலை முழுமையாக நீக்கி விடாமல் மெல்லிய தோலுடன் இருக்குமாறு சீவிக் கொள்ளுங்கள். பஜ்ஜி போட வாழைக்காய் மெல்லியதாக இருப்பது அவசியமாகும். அதனால் வாழைக்காயை தடிமனாக அல்லாமல் மெல்லியதாக சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.

valakkai-bajji-slice

ஒரு சிறிய பௌலில் மேற்கூறிய அளவின்படி, கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, பெருங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொண்டால் நல்ல மணமாக டீக்கடையில் கொடுக்கும் பஜ்ஜி போல மொருமொரு என்று வரும்.

heating-oil

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாய் அகன்ற வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடு ஏறியதும், அந்த எண்ணெயில் இருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு பஜ்ஜி மாவில் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் பஜ்ஜி அதிக அளவு எண்ணெய் குடிக்காமல் இருக்கும். பின்பு மெல்லியதாக சீவி வைத்துள்ள வாழைக்காய்களை ஒவ்வொன்றாக எடுத்து பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் நன்றாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.

valakkai-bajji

எண்ணெய் அதிகம் குடிக்காத, டீக்கடையில் இருக்கும் மொரு மொரு பஜ்ஜி ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே சட்டென பத்தே நிமிடத்தில் தயார் செய்து அசத்தி விடலாம். வாழைக்காய்க்கு பதிலாக பஜ்ஜிக்கு தேவையான வேறு எந்த காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம். அட்டகாசமான சுவையில் மாலை நேரத்தில் சாப்பிடும் பொழுது அப்படி ஒரு இன்பம் இருக்கும். அதனை நீங்களும் அனுபவிக்க தயாராகுங்கள்.

இதையும் படிக்கலாமே
சட்னி அரைக்க இனி தேங்காய் வேண்டாம். தேங்காய் இல்லாமல் 10 நிமிடத்தில் வித்தியாசமான புதிய 2 சட்னி ரெசிபி உங்களுக்காக!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.