வளர்பிறை அஷ்டமி விரதம் மற்றும் வழிபாட்டு முறை

உலகம் அனைத்தும் காத்து வருபவர் சிவபெருமான். புவியில் வாழும் உயிரிகள் அனைத்தின் நன்மைக்காகவும் சிவபெருமான் பல்வேறு ரூபங்களை தன்னிலிருந்து வெளிப்படுத்தியுள்ளார். அப்படி சிவனில் இருந்து தோன்றியவர் தான் “ஸ்ரீ பைரவ மூர்த்தி”. பைரவரை வழிபாடு செய்வதற்குரிய சிறந்த தினமாக மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள் இருக்கின்றன. இதில் “வளர்பிறை அஷ்டமி விரதம்” இருந்து பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறியலாம்.

ஒரு மாதத்தில் சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் “எட்டாவது” திதி அல்லது தினமாக வருவது அஷ்டமி தினமாகும். வளர்பிறை காலங்களில் இது “வளர்பிறை அஷ்டமி” தினம் என்றும் தேய்பிறை காலங்களில் இது “தேய்பிறை அஷ்டமி” தினம் என்றும் அழைக்கப்படுகிறது. “அஷ்டம்” என்றால் “எட்டு” என்று பொருள். எட்டு என்பது சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த எண்ணாகும். எனவே வளர்பிறை அஷ்டமி தினத்தில் விரதமிருந்து வழிபடுவதால் சனி பகவானின் அருளாசிகளும் நமக்கு கிடைக்கிறது.

புராணங்களின் படி வளர்பிறை அஷ்டமி தினத்தில் அஷ்டலட்சுமிகளும் தங்களின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள, அத்தினத்தில் வரும் ராகு காலத்தில் பைரவரை வழிபாடு செய்து பலனடைந்தனர் என கூறப்படுகிறது. வளர்பிறை அஷ்டமி தினத்தன்று, ராகுகாலத்தில் பைரவரை வழிபாடு சேயும் வரை உண்ணாநோன்பு இருப்பது நல்லது. உடல்நலம் குன்றியவர்கள், பசிபொறுக்க முடியாதவர்கள் பழங்கள், நீராகாரம் போன்றவற்றை உணவாக எடுத்து கொள்ளலாம். சரியாக ராகு காலத்தில் அருகில் இருக்கும் சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் அல்லது பைரவர் சந்நிதிக்கு சென்று, பைரவருக்கு 108 காசுகள்(சில்லறை நாணயங்கள்) வைத்து, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும், அப்போது சொர்ணாகர்ஷண பைரவர் மந்திரத்தை 27 முறை உரு ஜெபிக்க வேண்டும். வழிபாடு முடிந்ததும் அந்த 108 காசுகளை கொண்டு வந்து நீங்கள் தொழில், வியாபாரங்கள் செய்யும் இடங்களில் இருக்கும் பணப்பெட்டியில் கொஞ்சம் நாணயங்களை போட்டு வைக்க வியாபாரம் பெருகி பெருமளவு லாபங்கள் கிடைக்கும்.பொன் சேர்க்கை உண்டாகும்.

வீட்டில் அலமாரியில் இருக்கும் பணம் வைக்கும் பெட்டியிலும் கொஞ்சம் நாணயங்களை போட்டு வைத்தால் உங்களின் சேமிப்பு உயரும். வீண் செலவுகள் ஏதும் ஏற்படாது. வீட்டில் “அஷ்டலட்சுமி கடாட்சம்” ஏற்படும். இந்த வளர்பிறை விரத வழிபாட்டை 8 மாதங்கள் வரும் வரும் வளர்பிறை அஷ்டமி தினங்கள் அன்று செய்து வந்தால் பொருளாதார ரீதியாக மிக சிறப்பான பலன்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
கணவன் மனைவி இணைபிரியாமல் வாழ்வதற்கான பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Valarpirai Ashtami vratham procedure in Tamil and Valarpirai Ashtami vratham benefits in Tamil. It is also called as Ashtami viratham payangal in Tamil.