முருகப்பெருமானுக்கு உகந்த விரத நாட்களில், சஷ்டி திதியும் ஒன்று. மாதம் தோறும் வளர்பிறை சஷ்டி திதி, தேய்பிறை சஷ்டியை திதி வரும். நம்முடைய செல்வ வளம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்ல, பொருளாதார வளர, நாளை 13-05-2024 வரும் சஷ்டி திதியில் நாம் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மாதம் தோறும் வரக்கூடிய சஷ்டி திதி அன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களும் நாளை முருகனை மறக்காமல் வழிபாடு செய்து விடுங்கள்.
வளர்பிறை சஷ்டி திதி வழிபாடு
விரதம் இருப்பவர்கள் நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு விரதத்தை தொடங்கி விடுங்கள். உபவாசம் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்தது. முழு உபவாசம் இருக்க முடியும், வெறும் தண்ணீரை மட்டும் பருகி விட்டு விரதம் இருக்க முடியும் என்றால் இருக்கலாம். முடியாதவர்கள் பால் பழம் சாப்பிடுங்கள். அதுவும் முடியாது என்பவர்கள் மூன்று வேலை வயிறு நிரம்ப சாப்பிட்டும் விரதம் இருக்கலாம்.
நாளை மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த இனிப்பு நெய்வேத்தியம் செய்து வைக்கலாம். இல்லையென்றால் கல்கண்டு கூட வைத்து நெய்வேத்தியம் செய்து கொள்ளலாம். இதோடு செவ்வாழை வாங்கி முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியம் செய்து, இதை நாலு பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக வாழ வேண்டும், வருமானம் அதிகரிக்க வேண்டும், நல்ல வேலை கொடு வேலவா என்று வேண்டிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து வீட்டில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்துக் கொண்டு, இந்த வாழைப்பழத்தை ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும்.
கோவிலுக்கு வெளியில் யாசகம் கேட்பவர்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்களுக்கு இந்த வாழைப்பழத்தை தானம் கொடுத்தாலும் நல்லது தான். 11 வாழைப்பழம் வாங்கி வைத்து முருகருக்கு நெய்வேத்தியம் செய்து இதை நீங்கள் தானமாக கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். இல்லையென்றால் ஏதாவது ஒரு ஆசிரமத்திற்கு கூட வாழைப்பழம் வாங்கி தானம் செய்யலாம்.
உங்களுக்கு குழந்தை இல்லை என்றால் நாளை நீங்கள் குழந்தைகள் ஆசிரமத்திற்கு இந்த வாழைப்பழத்தை வாங்கி தானம் செய்யுங்கள். வீட்டில் இந்த வழிபாட்டை செய்ய முடியாது என்பவர்கள் கோவிலுக்கு வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு போய் வைத்து அர்ச்சனை செய்து அந்த வாழைப்பழத்தை தானம் செய்வதும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே: லட்சுமி கடாட்சம் ஏற்பட நிலைவாசல் பரிகாரம்
உங்களுடைய வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்களாக இருந்தால், நாளை அந்த வேலுக்கு கட்டாயமாக பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்து வேலுக்கு செவ்வரளி பூக்களை வைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய தவறக் கூடாது. அழகன் முருகனின் அருளை முழுமையாக பெற மேலே சொன்ன எளிய வழிபாட்டு முறை உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.