கல்விக்கு அதிபதியாக திகழக்கூடியவள் சரஸ்வதி என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சரஸ்வதிக்கு உரிய தினமாக கருதப்படுவது தான் வசந்த பஞ்சமி. இந்த வசந்த பஞ்சமி பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது, அன்றைய தினத்தில் வீட்டில் சரஸ்வதி தேவியை நாம் வழிபாடு செய்வதன் மூலம் சரஸ்வதி தேவியின் அருளால் சிறந்த கல்வி அறிவு, நல்ல ஞானத்தையும் பெற முடியும். இதோடு செல்வ செழிப்புடனும் வாழ முடியும். இவை அனைத்தையும் பெறுவதற்கு எந்த முறையில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வசந்த பஞ்சமி வழிபாடு
தை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமியை நாம் வசந்த பஞ்சமி என்று கூறுவோம். இது வசந்த காலம் தொடங்குவதற்குரிய அறிகுறியாக கருதப்படுகிறது. அந்த வசந்த பஞ்சமி அன்று நாம் சில வழிபாட்டு முறைகளை செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வசந்தம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த வசந்த பஞ்சமிக்கு உகந்த தெய்வமாக திகழக்கூடியவள் சரஸ்வதி தேவி. சரஸ்வதி தேவியை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு நல்ல கல்வி அறிவும், சிறந்த ஞானமும், நல்ல அறிவும் கிடைக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும். இதை தவிர்த்து அன்றைய தினத்தில் நாம் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும்பொழுது செல்வ செழிப்பும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழுவதுமே நாம் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து நல்ல நேரமாக பார்த்து நாம் இந்த வழிபாட்டை செய்யலாம். ஒவ்வொருவருடைய வீட்டிலும் சரஸ்வதி படம் என்பது இருக்கும். அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிறம் என்பது மிகவும் பிடிக்கும் என்பதால் அன்றைய நாளில் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்வது நல்லது.. அதேபோல் மஞ்சள் நிற பழங்களையும் மஞ்சள் நிற இனிப்பு பொருட்களையும் சரஸ்வதி தேவிக்கு நெய்வேத்தியமாக வைக்கலாம். இதோடு வீட்டில் படிக்கின்ற பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் படிக்கும் புத்தகத்தை எடுத்து வைத்தும் வழிபாடு செய்வது சிறப்பு.
இதோடு அன்றைய தினத்தில் நாம் தங்கம் வாங்கினோம் என்றால் எப்படி அக்ஷய திதியை நாளன்று தங்கம் வாங்கினால் பல மடங்கு சேருமோ அதே போல் தான் வசந்த பஞ்சமி நாளிலும் நாம் தங்கத்தை ஒரு குண்டுமணி அளவாவது வாங்கினோம் என்றால் அதிக அளவில் சேரும் என்று கூறப்படுகிறது. அப்படி தங்கம் வாங்கும் சூழ்நிலையில் இல்லாதவர்கள் கூட தங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய ஆவாரம் பூவை பறித்து வந்து சரஸ்வதி தேவிக்கு வைத்து வழிபாடு செய்தோம் என்றால் அதுவும் தங்கத்திற்கு இணையான பலனை நமக்குத் தரும் என்றும் அப்படி ஒரு வேளை மரங்கள் இல்லாத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய காய்ந்த ஆவாரம் பூவையாவது வாங்கி வந்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு வேளை எங்குமே ஆவாரம் பூ கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய மலர்களை வாங்கி வந்து சரஸ்வதி தேவிக்கு வைத்து வழிபாடு செய்வதன் மூலம் அந்த பலனை பெற முடியும். பிறகு சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் சொல்லி சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நமக்கு நல்ல ஞானமும், சிறந்த கல்வி அறிவும், சிறந்த அறிவும், நல்லொழுக்கமும், செல்வ செழிப்பும் அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே:சொந்த வீடு அமைய ஏற்ற வேண்டிய தீபம்
எளிமையாக செய்யக்கூடிய இந்த வசந்த பஞ்சமி வழிபாட்டை நாம் அனைவரும் செய்து நாமும் நம் பிள்ளைகளும் சிறப்பான முறையில் வாழ்வதற்கு சரஸ்வதி தேவியின் அருளைப் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.