தமிழர்களின் உணவு பண்பாட்டு முறைகளில் அறுசுவை என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. அந்த அறுசுவைகளில் துவர்ப்பு சுவை என்பது நம்மில் பல பேரால் சுவைக்கப்படாத சுவையாகவே இருக்கிறது. இந்த துவர்ப்பு சுவை வாழைப்பூவில் அதிகமாக உள்ளதால், இந்த வாழைப்பூவில் வித்தியாசமா அதே சமயம் ரொம்ப சுவையாக சட்னி செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.
வாழைப்பூவில் பெண்களுக்கு தேவையான சத்துக்கள் நிறைய இருப்பதால் பெண்கள் அவசியம் தங்கள் உணவில் வாழைப்பூவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வாழைப் பூவில் கூட்டு, பொரியல், வடை என்று செய்வோம். இன்று மிகவும் எளிமையான முறையில் நாம் வாழைப்பூவை வைத்து சட்னி செய்ய போகிறோம்.
அதற்கு ஒரு நடுத்தரமான வாழைப்பூவை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒன்றிரண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி, அதில் 2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, 5 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
பருப்பு லேசாக பொன்னிறம் ஆன பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் மல்லி, 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து உளுந்து நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வாழைப்பூவை நன்றாக தண்ணீர் இல்லாமல் பிழிந்து சேர்க்க வேண்டும். வாழைப்பூ லேசாக வதங்கிய பிறகு அதில் சின்ன வெங்காயம் 100 கிராமையும், 15 பல் பூண்டையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.
இவையெல்லாம் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய இந்த வாழைப்பூ வெங்காயத்தையும் மேலும் கடலைப் பருப்பு உளுந்து ஆகியவற்றையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான வாழைப்பூ சட்னி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: கருவேப்பிலை பூண்டு குழம்பை ஒரு முறை இப்படி செய்து கொடுத்தீங்கனா, இதோட சுவைக்கு வீட்ல இருங்கவங்க எல்லோரும் அடிமை ஆகிடுவாங்க. அந்த அளவுக்கு சுவை பிரமாதமாக இருக்கும்.
இந்த சட்னியை நாம் வெரைட்டி சாதத்திற்கு தொட்டுக் கொள்ள துவையல் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை போன்றவற்றிற்கு சிறிது நீரை அதிகமாக ஊற்றி அதை தாளித்து சட்னியாகவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வாழைப்பூவின் அனைத்து சத்துக்களும் அனைவருக்கும் கிடைக்க சுலபமான இந்த வாழைப்பூ சட்னியை தயார் செய்து சாப்பிடுவோம்.