ஆவணி மாதம் என்பது சுப மங்களங்கள் நிறைந்த மாதம் என்றும் அந்த மாதத்தில் சுபகாரியங்களை செய்யும் வழக்கத்தை நாம் அனைவரும் வைத்திருப்போம் என்றும் நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட ஆவணி மாதத்தில் வரக்கூடிய தசமி திதி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த திதியாக கருதப்படுகிறது. இந்த தசமி திதி வரக்கூடிய நாளில் நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது பல மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில பொருட்களை நாம் வாங்குவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆவணி தசமி வழிபாடு
பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய தசமி திதியை தான் நாம் விஜயதசமி என்று கொண்டாடுவோம். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய தசமி திதிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. பொதுவான பலன்கள் என்று பார்க்கும் பொழுது தசமி திதியில் நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது முக்கியமான ஒரு பலனாக தெரிகிறது. அதனால்தான் பலரும் தசமி திதியில் தங்கம் வெள்ளி போன்ற உயர்ந்த பொருட்களை வாங்கும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். வசதி மிக்கவர்களால் தங்கத்தை வாங்குவது என்பது எளிது. வசதி குறைவாக இருப்பவர்கள் தங்கத்தை வாங்க இயலாது அல்லவா? அப்படிப்பட்டவர்களும் வாங்கக்கூடிய ஒரு பொருளையும் பற்றி நான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
ஆவணி மாத தசமி திதி என்பது ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் குளிகை நேரத்தில் தங்கம், வெள்ளி போன்ற உயர்வான பொருட்களை வாங்க வேண்டும். ஒரு வேளை தங்கம், வெள்ளி வாங்கும் அளவிற்கு பண வசதி இல்லை என்பவர்கள் அன்றைய தினத்தில் மண் பானையை வீட்டிற்கு வாங்கி வந்து அதை சுத்தம் செய்து அன்றே அதை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். ஆவணி தசமியில் மண் சம்பந்தப்பட்ட பொருட்களை புதிதாக நாம் வாங்குவதன் மூலம் நம்முடைய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மேலும் அன்றைய நாளில் நாம் பழைய பொருட்களை வாங்க கூடாது என்பதும் அதேசமயம் கிழிந்த ஆடைகளை உடுத்தக் கூடாது என்றும் கூறப்படுகிறது. முடிந்த அளவிற்கு புதிய ஆடைகளை அணிவது அல்லது நம்மிடம் இருக்கக்கூடிய ஆடைகளில் எந்த ஆடை நன்றாக இருக்கிறதோ அதை அணிந்து கொள்வது என்பது சிறப்பு. அதேபோல் எந்த ஒரு பொருளை நாம் வாங்குவதாக இருந்தாலும் அந்த பொருளை பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும். மாத தவணை முறையில் புதிய பொருட்களை வாங்க கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஆவணி மாத தசமி திதியில் நம்மால் இயன்ற அளவிற்கு தான தர்மங்களை செய்வதன் மூலமும் நம்முடைய வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: அதிகம் சம்பாதிக்க வழி
சுப காரியங்கள் அதிக அளவில் நடைபெறக்கூடிய ஆவணி மாதத்தில் வரக்கூடிய தசமி திதியை இப்படி பயன்படுத்துபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பொருளாதார உயர்வு ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.