வாழைக்காயை இப்படி பொரியல் செய்து கொடுத்து பாருங்க இது வாழைக்காயில் செய்தது தான் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. வாழக்காயே பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட தட்டு தட்டா சாப்பிடு காலி பண்ணிடுவாங்க.

rawbanana egg poriyal
- Advertisement -

வாழைக்காய் ஒரு நல்ல ருசியான உணவு தான் என்றாலும் இது பெரும்பாலும் யாருக்கும் பிடிப்பதில்லை. ஒரு சிலருக்கு இதில் வாய்வுத் தொல்லை இருக்கும் என்பதால் சாப்பிட மாட்டார்கள். ஒரு சிலரோ இது ப்ரை ஆக செய்தால் சாப்பிடுவார்கள் மற்றபடி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த முறையில் வாழைக்காய் பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது என்பவர்கள் கூட நிச்சயமாக கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாங்க இந்த வாழைக்காய் பொரியல் ரெசிபி பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்தப் பொரியல் செய்வதற்கு ஒரு வாழைக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நல்ல காயான வாழைக்காயாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இது கொஞ்சம் பழுத்த இருந்தாலும் வாழைக்காயில் இனிப்பு சுவை வந்துவிடும் சாப்பிட அவ்வளவு நன்றாக இருக்காது. இப்போது வாழைக்காயை தோல் சீவி சின்னதாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்து மீடியம் சைஸ் வெங்காயம் இரண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதே போல் பூண்டு பத்து பல் தோல் உரித்து சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொரியலுக்கு பூண்டை கட்டாயமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த வெங்காயம் சேர்த்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த பூண்டையும் சேர்த்த பின் வெங்காயம் லேசாக நிறம் மாறும் வரை வதக்கி விடுங்கள்.

அடுத்து இதில் வாழைக்காயை சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு குழம்பு மிளகாய்த்தூள் சேர்ப்பதாக இருந்தால் தனியா தூள்,மிளகாய் தூள் இரண்டையும் தவிர்த்து விட்டு ஒன்றரை டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூளை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது அனைத்தையும் சேர்த்த பிறகு ஒரு முறை நன்றாக கலந்த பின் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வாழைக்காயை 10 நிமிடம் வேக விடுங்கள். வாழைக்காய் 10 நிமிடம் வெந்த பிறகு தண்ணீர் மொத்தமாக சுண்டி இருக்க வேண்டும். அதன் பிறகு மூன்று முட்டையை இதில் உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு முட்டை கூடுதலாக தேவைப்பட்டாலும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த முட்டைக்கு மட்டும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து வாழைக்காய் உடன் நன்றாக கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ரோட்டுக்கடை ஸ்டைலில் காரசாரமான காரச் சட்னியின் சீக்ரெட் இது தான். இப்படி மட்டும் இந்த சட்னி அரைத்தீங்கன்னா குண்டா இட்லி சுட்டாலும் பத்தவே பத்தாது.

இந்த முட்டையும் வாழைக்காயும் நன்றாக கலந்து தண்ணீர் இல்லாமல் ட்ரையாக வரும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு கொஞ்சமாக நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவி அடிப்பை அணைத்து விடுங்கள். சுவையான வாழைக்காய் முட்டை பொரியல் தயார். இந்த வாழைக்காய் பொரியல் சுட சுட ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் வைத்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -