வீட்டில் ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

hanuman jayanthi valipadu
- Advertisement -

அஞ்சனை மைந்தன் வாயு புத்திரன் சிவபெருமானின் மறு அவதாரமாக திகழக்கூடியவர் தான் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளன்று பிறந்தார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மூல நட்சத்திரம் நாளை 10.1.2024 அன்றும், திதிப்படி அமாவாசை திதி நாளை மறுநாள் 11.1.2024 அன்று இருக்கிறது. இதனால் ஒரு சில ஆஞ்சநேயர் ஆலயங்களில் நாளையும் சில ஆஞ்சநேயர் ஆலயங்களில் நாளை மறுநாளும் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வீட்டில் எந்த முறையில் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

குறிப்பாக எந்தவித வேண்டுதலும் இல்லாமல் அனுமனின் அருளாசி மட்டும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நாளை விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்ளலாம். தங்களுக்கு அதிகமாக கஷ்டங்கள் இருக்கிறது, கடன்கள் இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாளை மறுநாள் விரதம் இருந்து வழிபடலாம். முழு நாளும் உபவாசம் இருந்து இரவில் மட்டும் எளிமையான உணவுகளை உண்டு விரதம் இருக்கும் முறையும் இருக்கிறது. உடல் நலனில் பாதிப்பு இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒரு ரூபத்தில் விரதத்தை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

பொதுவாக விரதம் இருக்கும் நாள் அன்று “ஸ்ரீ ராமஜெயம்” என்ற மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு நாள் முழுவதும் கூறுவது மிகவும் சிறப்புக்குறியதாக இருக்கும். தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் புகைப்படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தன குங்குமம் வைத்து துளசி இலையால் மாலை தொடுத்து போடவேண்டும். மாலை தொடுக்கும் அளவிற்கு துளசி இலை இல்லை என்பவர்கள் சிறிதளவாவது துளசி இலையை எடுத்து அவருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

அவருக்கு மிகவும் பிடித்தமான உளுந்த வடையை வெங்காயம் சேர்க்காமல் மிளகு மட்டும் தட்டி போட்டு செய்து அதையும் மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவிக்கலாம் அல்லது தட்டில் வைத்து நெய்வேத்தியமாகவும் செய்யலாம். ஏதாவது கோரிக்கை வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த கோரிக்கையை மனதில் நினைத்துக் கொண்டு வெற்றிலை மாலை கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்றலாம். மேலும் அவருக்கு மிகவும் பிடித்தமான வெண்ணையை சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்து வழிபடலாம். இவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது இவை அனைத்தையுமே நாம் செய்யலாம்.

- Advertisement -

பிறகு ஆஞ்சநேயரின் படத்திற்கு முன்பாக 6 நெய் தீபத்தை ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழங்களை வைக்க வேண்டும். பிறகு ஒரு சுத்தமான டம்ளரில் சுத்தமான நீரை முழுவதுமாக பிடித்து அவருக்கு வைத்து விட வேண்டும். ஆஞ்சநேயரை நினைத்து நாம் பூஜை செய்ய வேண்டும் என்றால் “ஸ்ரீ ராமஜெயம்” என்ற மந்திரத்தை மட்டும் கூறினாலே போதும். வேறு எந்த மந்திரத்தை மந்திரத்தையும் கூற வேண்டும் என்று அவசியமே இல்லை.

அப்படி நாம் கூறுவதற்கு முன்பாக ஒரு மனை பலகையை எடுத்து சுத்தம் செய்து அதில் பச்சரிசி மாவால் கோலம் போட்டு அதை பூஜை அறையில் வைத்து விட்டு பிறகு நாம் அருகில் அமர்ந்து மந்திரத்தை 108 முறை கூறவேண்டும். முடிந்தவர்கள் 108 முறை எழுதி அதை மாலையாக தொடுத்தும் ஆஞ்சநேயருக்கு போடலாம். எந்த இடத்தில் ஸ்ரீ ராமஜெயம் என்ற மந்திரம் உச்சரிக்கப்படுகிறது அந்த இடத்தில் ஹனுமான் வந்து வீற்றிருப்பார் என்பதால் தான் அவர் வந்து வீற்றிருப்பதற்காக அந்த மனை போடப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி விலக ஆகாச கருட கிழங்கு பரிகாரம்

இந்த முறையில் வீட்டிலேயே எளிமையான முறையில் இப்படி நாம் வழிபாடு செய்து அனுமனின் பரிபூரணமான அருளை நம்மால் பெற முடியும்.

- Advertisement -