அறுசுவையும் சேர்ந்த கல்யாண வீட்டு ‘வெல்ல மாங்காய் பச்சடி’ பாரம்பரிய முறையில் மிக சுலபமாக நம் வீட்டிலேயே செய்வது எப்படி?

sweet-mango3
- Advertisement -

பொதுவாக மாங்காய் என்றாலே அனைவருக்கும் நாவில் ஜலம் ஊறும். இனிப்பும், புளிப்பும் கலந்த மாங்காய் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்? மாங்காய் வைத்து விதவிதமான திண்பண்டங்கள் தயார் செய்தாலும் ‘வெல்ல மாங்காய் பச்சடிக்கு’ ஈடு இணை எதுவுமே இல்லை. அறுசுவையும் கலந்த இந்த மாங்காய் பச்சடி செய்வதற்கு அவ்வளவு ஒன்றும் நேரம் ஆகப் போவதில்லை. ஒருமுறை செய்து வைத்தால் நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால் அதன் சுவையோ இரண்டே நாளில் காலி செய்து விடுமாறு நம்மைத் தூண்டி விடும். அந்த அளவிற்கு ருசி மிகுந்த வெல்ல மாங்காய் பச்சடி எப்படி சுலபமாக பாரம்பரிய முறையில் செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

mango-mangaai

‘வெல்ல மாங்காய் பச்சடி’ செய்ய தேவையான பொருட்கள்:
கிளி மூக்கு இனிப்பு மாங்காய் – இரண்டு
பொடித்த வெல்லம் – ஒரு கப்
சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து

- Advertisement -

கடுகு – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஐந்து
பொடியாக நறுக்கிய இஞ்சி – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்

mango-cutting

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
வேப்பம் பூ பொடி – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவிற்கு

- Advertisement -

‘வெல்லம் மாங்காய் பச்சடி’ செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு நல்ல கிளி மூக்கு மாங்காய்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாங்காய் காயாகவும், பழமாகவும் கலந்து இருக்க வேண்டும் என்பதை கவனியுங்கள். தோல் பிடிக்காதவர்கள் தோல் சீவி பச்சடிக்கு தகுந்தவாறு பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் நன்கு கழுவி தோலுடன் பொடிப் பொடியாக சதுர சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

sweet-mango

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு நான்ஸ்டிக் பேன் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு கறிவேப்பிலைகளை போட்டு பொரிய விடுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள மாங்காய்களை சேர்த்து லேசாக 2 நிமிடம் எண்ணெயில் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள். ஒரு பத்து, பதினைந்து நிமிடம் கழித்து பார்த்தால் வெல்லம் உருகி பாகாகி கெட்டியாக மாறும், மாங்காய் வெந்து தண்ணீரும் உறிஞ்சி விட்டிருக்கும். இந்த சமயத்தில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கி விடுங்கள்.

sweet-mango1

பின்னர் தாளிக்க ஒரு வாணலியை வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அதில் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு பொரிக்க விடவும். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும். இஞ்சிக்கு பதிலாக சுக்குப்பொடி இருந்தாலும் சேர்க்கலாம். பின்னர் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் அளவிற்கு வேப்பம் பூ பொடி ஆகியவற்றை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். எண்ணெயின் சூட்டிலேயே அவை வறுபட்டு பச்சை வாசம் போனதும் மாங்காயுடன் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளுங்கள். வேப்பம் பூ பொடி கடைகளில் கிடைக்கும். உங்கள் வீட்டில் வேப்பம் பூக்கள் கிடைத்தால், லேசாக வாணலியில் வறுத்து பொடி செய்தும் வைத்துக் கொள்ளுங்கள்.

sweet-mango2

காரம், துவர்ப்பு, உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு என்று எல்லா சுவைகளும் கலந்து பாரம்பரிய முறையில் செய்யும் இந்த வெல்ல மாங்காய் பச்சடி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொண்டும் சாப்பிடலாம். நாவில் வைக்கும் பொழுது நாவின் நரம்புகள் அத்தனையும் நர்த்தனமாடும் இந்த பாரம்பரிய மாங்காய் பச்சடி எளிதாக வீட்டிலேயே நீங்களும் செய்து உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -