வெண் பூசணி மோர் குழம்பு செய்ய 5 நிமிஷம் கூட ஆகாது! சுவையான வெண்பூசணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.

poosani-mor-kulambu1
- Advertisement -

வெண்பூசணி மோர் குழம்பு மணக்க மணக்க செய்வதற்கு நீங்களும் தயாரா? தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து சாப்பிடுபவர்களுக்கு வித்தியாசமான காய்கறிகளை போட்டு இப்படி மோர்க்குழம்பு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வெயில் காலத்தில் புளி சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளை விட, இப்படி தயிர் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வயிற்றுக்கும், மனதிற்கும் நிறைவாக இருக்கக்கூடிய இந்த ‘வெண்பூசணி மோர் குழம்பு’ எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெண் பூசணி மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
வெண்பூசணி – அரை கப், சின்ன வெங்காயம் – 10, தயிர் – அரை லிட்டர், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – இரண்டு இன்ச் அளவிற்கு, சீரகம் – ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

வெண்பூசணி மோர் குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் வெள்ளைப் பூசணிக்காயைத் தோல் நீக்கி சுத்தம் செய்து உள்ளே இருக்கும் சதைப் பற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து முழுதாக அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மற்ற எல்லா தேவையான பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

அரை லிட்டர் தயிரை மிக்ஸியில் ஊற்றி நைசாக ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஜாரை கழுவி அந்த தண்ணீரையும் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதே மிக்ஸி ஜாரில் ஊற வைத்த துவரம் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதையும் தயிருடன் சேர்த்து கலந்து விடுங்கள். இதை அப்படியே ஓரமாக வைத்து விட்டு அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாக தாளித்து ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். 2 வர மிளகாய்களைக் கிள்ளிச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை லேசாக வதங்கியதும் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் பாதி அளவிற்கு வதங்கி வரும் பொழுது, நறுக்கி வைத்துள்ள வெண் பூசணிக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம், பூசணி சுருள வதக்கி வரும் பொழுது பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் கரைத்து வைத்துள்ள மோரை இதனுடன் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அடுப்பு அனல் அதிகமாக இருந்தால் மோர் திரிந்து விடும் எனவே குறைவாக வைத்துக் கொண்டு கொதிக்கும் வரை காத்திருங்கள். 2 கொதி நன்கு கொதித்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவி சாதத்துடன் பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சூப்பராக இருக்கும் இந்த வெண் பூசணி மோர் குழம்பு நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -