வெண்டைக்காய் வடை செய்முறை

vendakkai vadai
- Advertisement -

லீவு விட்டாச்சு. பசங்க எல்லாம் வீட்ல இருப்பாங்க. ஸ்நாக்ஸ் ஏதாவது வேணும்னு கேட்பாங்க. கடையிலிருந்து எவ்வளவு நாளைக்கு வாங்கி கொடுக்க முடியும்? வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செஞ்சா நல்லா இருக்கும்ல. அதேசமயம் ஆரோக்கியமா செஞ்சா இன்னும் சூப்பரா இருக்கும் இல்ல. அதுவும் ஈசியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும் இல்ல. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஆரோக்கியமான வெண்டைக்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

காய்கறிகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு காய்கறிகளுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணம் இருக்கிறது. அதே போல் ஒவ்வொரு காய்கறிகளும் பலவிதமான சத்துக்களையும் உள்ளடக்கி இருக்கிறது. காய்கறிகளை குழந்தைகளிடம் கொடுத்தால் சாப்பிடுவார்களா? வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். அப்படி ஒதுக்கும் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் வெண்டைக்காயை வைத்து ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் ஸ்நாக்ஸ்க்கு ஸ்னாக்ஸும் ஆகிவிடும். ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் ஆகிவிடும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • வெண்டைக்காய் – 1/4 கிலோ
  • கடலை மாவு – 1 கப்
  • அரிசி மாவு அல்லது கான்பிளவர் மாவு – 1/2 கப்
  • வெங்காயம் – 2
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி – ஒரு இன்ச்
  • பூண்டு – 3 பல்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெண்டைக்காயை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பிறகு ஈரம் இல்லாமல் துடைத்து அரை மணி நேரம் அப்படியே உலர விட்டு விடுங்கள். பிறகு வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கி எந்த அளவுக்கு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவுக்கு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

நறுக்கிய இந்த வெண்டைக்காயை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி விட்டு அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் நன்றாக இடித்த இஞ்சி துண்டு மற்றும் நன்றாக இடித்த பூண்டு, சோம்பு தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடை பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வடை மாவை சிறு உருண்டையாக எடுத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட வேண்டும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட வேண்டும். இரண்டு புறமும் நன்றாக சிவக்க வேகவைத்து எடுத்து பரிமாற வேண்டும்.

விருப்பம் இருப்பவர்கள் சிறிது கடலைப்பருப்பை ஊறவைத்து இந்த மாவுடன் சேர்த்து பிணைந்தும் வடை சுடலாம். குழந்தைகளுக்கு தருவதாக இருக்கும் பட்சத்தில் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பூண்டு சட்னி செய்முறை

மிகவும் எளிதில் உடனே செய்யும் அளவிற்கு சத்து மிகுந்த வெண்டைக்காய் வடையை ஒரு முறை செய்து குழந்தைகள் ருசிக்க தருவோம்.

- Advertisement -