நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அப்படிப்பட்ட பணம் தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் நம் மகாலட்சுமி தாயாரையும் குபேர பகவானையும் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். குபேரருக்குரிய கிழமையாக வியாழக்கிழமை அன்றும் மகாலட்சுமிக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்றும் சிறப்பான பூஜைகளை பலரும் செய்து பலன் அடைந்து இருக்கிறார்கள். அந்த வகையில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி ஆகஸ்ட் மாதத்தின் 15ஆம் நாள் மிகவும் எளிமையான முறையில் லட்சுமி குபேரரை வழிபாடு செய்வதன் மூலம் பணம் தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணம் வேண்டுதலை நிறைவேற்றும் பரிகாரம்
வியாழக்கிழமை குபேரபகவானை வழிபாடு செய்வதோடு வெள்ளிக்கிழமை மகாலட்சுமியையும் வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு நிறைவான செல்வம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. லட்சுமி குபேரரை வெள்ளிக்கிழமையில் சுக்கிர கோரையில் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு அளப்பரியான் நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் இந்த முறை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு வெள்ளிக்கிழமையாக திகழ்கிறது. இது ஆடி மாதத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையாகவும் அதேசமயம் ஆங்கில மாதத்தின் தேதியின்படி 15 என்று வருகிறது. இதன் கூட்டுத்தொகை ஆறு என்பதால் இது சுக்கிரனுக்கு மிகவும் உரித்தான ஒரு நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை நாம் செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
இந்த வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரக்கூடிய சுக்கிர ஹோரையில்தான் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வரக்கூடிய 8 மணியில் இருந்து 9 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர கோரையில் செய்யும்பொழுது அளவிலாத நன்மைகள் உண்டாகும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் கண்டிப்பான முறையில் குளித்திருக்க வேண்டும். அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது. இந்த வழிபாட்டை வீட்டு பூஜை அறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருக்கக் கூடிய எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு இந்த மூன்று திசைகளில் ஏதாவது ஒரு திசையை பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள். அமரும்பொழுது தரையில் அமராமல் விரிப்பை விரித்து அமர வேண்டும். இயன்றவர்கள் பூஜையறையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக ஐந்து நெல்லிக்கனிகளை வைத்து விட்டு இந்த மந்திரத்தை கூறும்பொழுது இரட்டிப்பு பலன் கிடைக்கும். உங்களுடைய வலது கையில் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொள்ளுங்கள். முதலில் மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு குபேர பகவானையும், சுக்கிர பகவானையும் மனதார நினைத்து விட்டு உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பண தேவைகளும் பூர்த்தியடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த மந்திரத்தை ஆரம்பிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை 15 நிமிடம் தொடர்ச்சியாக மனதை ஒருநிலைப்படுத்தி கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய அந்த ஐந்து ரூபாய் நாணயங்களில் ஒன்றை நம்முடைய சமையல் அறையில் இருக்கக்கூடிய உப்பு ஜாடியின் அடியில் வைக்க வேண்டும். மீதம் இருக்கக்கூடிய ஐந்து ரூபாயை பணம் வைக்கும் இடத்தில் ஒரு பேப்பரிலோ அல்லது துணியிலோ மடித்து வைக்க வேண்டும். இந்த இரண்டு ஐந்து ரூபாய்களையும் எக்காரணம் கொண்டும் செலவு செய்யக்கூடாது.
மந்திரம்
” ஓம் ஸ்ரீம் யக்ஷாதிபதியே ஸர்வ தனம் ஆகர்ஷணாய ஹீம் பட் ஸ்வாஹா “
இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்ய யோகத்தை தரும் ஆடி கடைசி வெள்ளி
எளிமையான இந்த ஐந்து ரூபாய் பரிகாரத்தை முழுமனதோடு யார் ஒருவர் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை லட்சுமி குபேரரை நினைத்து செய்கிறார்களோ அவர்களுக்கு பணம் தொடர்பான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.