வீட்டிலேயே சுலபமாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் வெண்ணிலா ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்கள். கடையில் வாங்குவதில் இருக்கும் சுவை அப்படியே இருக்கும்.

chill
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ் கிரீமை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.  இப்படி எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த ஐஸ்கிரீமை நீங்கள் உங்கள் வீட்டிலே செய்து கொடுத்து பிள்ளைகளை அசத்தலாம்.  இதை அதிக செலவில்லாமல் நாம் வீட்டில் உபயோகிக்கும் நான்கே பொருட்களை வைத்து மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:
பால் – 1/2 லிட்டர், சர்க்கரை – 250 கிராம், வெண்ணிலா எசன்ஸ் (அ) ஏலக்காய் பொடி – சிறிதளவு, சோள மாவு – 2 டீஸ்பூன்

- Advertisement -

சரி இப்போது இந்த வெண்ணிலா ஐஸ் கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க. முதலில் ஒரு அகன்ற அடி கனமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் பாலை ஊற்றி கொள்ளுங்கள். இந்த பால் நல்ல திக்கான பாலாக இருக்க வேண்டும்.  அதாவது ஃபுல் க்ரீம் மில்க். இந்தப் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும், பாலில்  தண்ணீர் சேர்க்கக்கூடாது. ஓரளவுக்கு பால் நன்றாக சுண்டியதும்,  ஒரு சிறிய கிண்ணத்தில்  சிறிதளவு கொதித்துக் கொண்டிருக்கும் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள்.

சோள மாவு இல்லாத பட்சத்தில் அரிசி மாவு அல்லது மைதா மாவு இருந்தால் கூட சேர்க்கலாம். பின் நன்றாக கட்டி இல்லாமல் அதை கலக்கி  கொள்ளுங்கள். பிறகு அதை கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் உற்றி விடுங்கள்.  இந்த  சோள மாவு கரைச்சலை ஊற்றியவுடன் பாலை கைவிடாமல் நன்றாக கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்,  இல்லை என்றால் அடி பிடித்து விடும்.

- Advertisement -

பின் இது இரண்டும் சேர்ந்து ஓரளவிற்கு கிரீம் பதத்திற்கு வந்து விடும். அதன் பிறகு அரை லிட்டர் பாலுக்கு ஒரு கால்  கிலோ சர்க்கரை சேர்க்கவும்,  மீண்டும் கைவிடாமல் நன்றாக கலக்கிக் கொண்டே இருங்கள். கடைசியில்  இறக்கும் போது இரண்டு சொட்டு வெண்ணிலா எசன்ஸ் விடவும். வெண்ணிலா எசன்ஸ் இல்லாதவர்கள் சிறிது ஏலக்காய் பொடி இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் வாசமும் நன்றாக தான் இருக்கும்.

வெண்ணிலா ஐஸ் கிரீம் என்பதால் அந்த எசன்ஸ் ஊற்றினால் தான் சரியாக இருக்கும் இல்லாத பட்சத்தில் மட்டும் இதை உபயோகித்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து பாலை இறக்கி வைத்து விடுங்கள். பால் நன்றாக ஆறியவுடன் ஜாரில் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று விடவும்.  நன்றாக பால் கலவை நுரைத்து வரும். இதை ஒரு டப்பாவில் சேர்த்து ஃப்ரீசரில் 2 மணி நேரம் வைத்து விடுங்கள்.

இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு சுற்று விடவும். மீண்டும் ப்ரீசரில் வைத்து எட்டு மணி நேரம் கழித்து எடுத்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீம் தயாராகிவிட்டது.  இந்த ஐஸ்கிரீம் மீது உங்களுக்கு விருப்பமான நட்ஸ், கிஸ்மிஸ் போன்ற ஏதாவது ஒன்றை தூவிக்கொள்ளுங்கள். இனி அதிக விலை கொடுத்து ஐஸ்கிரீமை கடைகளில் வாங்க வேண்டிய தேவை இல்லை. குறைந்த செலவில் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் நீங்களே உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இதை செய்து கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -