1 கட்டு வெந்தயக் கீரையும், 50g வெந்த துவரம் பருப்பும் இருந்தால் போதுமே 10 நிமிடத்தில் சுவையான சாம்பார் இப்படியும் செய்து விடலாம்.

venthaya-keerai-sambar
- Advertisement -

உடல் சூட்டை உடனடியாக தணிக்கும் வெந்தயக் கீரையை நம் வீட்டிலேயே எளிமையாக வளர்த்து விடலாம். கைப்பிடி அளவிற்கு வெந்தயத்தை எடுத்து மண்ணில் ஊன்றி வைத்தால் போதும்! ஒரே வாரத்தில் வெந்தயக்கீரை சூப்பராக முளைத்துவிடும். நம் கைகளாலேயே அதை அறுவடை செய்து இப்படி சாம்பாரும் வைத்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும்? சதா என்ன குழம்பு செய்வது? என்று குழம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஆரோக்கியமான ஒரு சாம்பார் வைத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்! இதை எப்படி வைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Venthayam

வெந்தயக் கீரையில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. ஜீரண சக்தியை அதிகரித்து உடல் சூட்டை குறைத்து, தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் ஆண்மை பலப்பட ஆண்கள் அடிக்கடி வெந்தயக் கீரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. வயிற்று பிரச்சனைகள், இடுப்பு வலியால் அவதிபடுபவர்கள் வெந்தயக் கீரையை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிடலாம்.

- Advertisement -

‘வெந்தயக் கீரை சாம்பார்’ செய்ய தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை – ஒரு கட்டு, வேக வைத்த துவரம் பருப்பு – 50 கிராம் அளவிற்கு, தக்காளி – ஒன்று, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து வரமிளகாய் – 2, பூண்டு பற்கள் – 6, பெருங்காயம் – சிறிதளவு, உப்பு தேவையான அளவிற்கு.

vendhaya-keerai

‘வெந்தயக் கீரை சாம்பார்’ செய்முறை விளக்கம்
முதலில் 50 கிராம் அளவிற்கு துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி அலசி பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த இந்த துவரம் பருப்புடன் ஒரு கட்டு வெந்தயக் கீரையை நன்கு அலசி, கழுவி, கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி, ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 3 விசில் வரை விடவும்.

- Advertisement -

பின்பு குக்கரில் இருக்கும் பிரஷர் நீங்கியதும், அடுப்பை பற்ற வைத்து ஒரு சிறிய வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் தோல் நீக்கிய பூண்டு நசுக்கி சேர்க்கவும். பின்னர் வர மிளகாயை கிள்ளி போடவும். இறுதியாக ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.

keerai-sambar

அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சுலபமா பத்து நிமிடத்தில் வெந்தயக் கீரை சாம்பார் ஆரோக்கியமான முறையில், அட்டகாசமான சுவையில் நாமே செய்துவிடலாம். வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை போன்றவை மிகவும் சத்துள்ள கீரை வகைகள். இவற்றை கட்டாயம் வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். வெந்தயக்கீரையை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் அகலும். நம்மை எப்போதும் இளமையுடன் வைத்துக் கொள்ள வெந்தயக் கீரை உணவை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -