உறவுகளுக்குள் பிரிவு என்பதும் சில சமயங்களில் நிகழ்ந்து விடுகிறது. பிரிவுகள் நிரந்தரமானால் வாழ்க்கையில் பெரும் துயர் ஆகும். எந்த வகை உறவாகினும், கசப்பான அனுபவங்களோடு பிரியவே கூடாது. இப்படி பிரிந்தவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர விரும்புபவர்கள், பிரிந்து போன உறவை தேடுபவர்கள் இந்த ஒரு விளக்கை ஏற்றி பரிகாரம் செய்யலாம். அது என்ன? எப்படி செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
கசப்பான அனுபவங்கள் நீண்ட காலத்திற்கு நம்மை தொடரும் ஒரு மோசமான விஷயமாகும். மனக்கசப்புகள் ஏற்பட்டு பிரிந்து போன உறவுகள் பல நம்மிடையில் உண்டு. இந்த உறவுகளை இழந்த பின்பு தான் சிலருக்கு ஏன் இந்த தவறை செய்தோம் என்று நொந்து கொள்ள தோணும். இப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு விளக்கை ஏற்றுவதன் மூலம் பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தீபம் ஏற்றும் பொழுது எந்த எண்ணெயில் தீபம் ஏற்றுகிறோம் என்பதும் முக்கியமாகும். நல்ல விஷயங்களுக்கு நெய், நல்லெண்ணெய், தீப எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை ஏற்றுவது நல்லது. சுபகாரியங்களுக்கு இந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட தெய்வத்தின் உடைய அருள் கிடைக்க இலுப்பை எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.
பெண் தெய்வங்களுக்கு, சக்தி வாய்ந்த சிறு குலதெய்வங்களுக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றலாம். நீண்ட காலம் குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும். அது போல பிரிந்தவர்கள் ஒன்று சேர, கசப்பான அனுபவங்களோடு விலகியவர்கள் ஒன்று கூட வேப்ப எண்ணெயை கொண்டு தீபம் ஏற்றுங்கள்.
செவ்வாய், வெள்ளி, வியாழன் போன்ற கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றலாம். அம்பாளுக்கு ஏற்ற வேண்டிய தீபம் இதுவாகும். அம்பாள் முன்பு ஒரு சிறு அகல் விளக்கு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் போல் வேப்ப எண்ணெயை ஊற்றி வெள்ளை பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். நைவேத்தியம் படைக்க இனிப்பான பொருட்களை வையுங்கள்.
இனிக்க இனிக்க சர்க்கரை பொங்கல் செய்து வைத்து, அம்பாளை வேண்டி கசப்பான இந்த வேப்ப எண்ணெயை ஊற்றி மனதார, பிரிந்தவர்கள் என்னை தேடி வர வேண்டும், அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் நாங்கள் இணைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். இப்படி வேப்ப எண்ணெயால் தீபம் ஏற்றும் பொழுது உங்களுக்குள் இருந்த மனக்கசப்புகள், கசப்பான அனுபவங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:
ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தவறாமல் 21 வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றினால், நீங்கள் எண்ணியபடி பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். உங்களை விட்டு எந்த சூழ்நிலையில் அவர்கள் சென்றிருந்தாலும், மீண்டும் அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்களை ஏற்றுக் கொள்வதற்கான அறிகுறி தெரிய ஆரம்பிக்கும். அதற்கான முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபட வேண்டும். விளக்கேற்றி விட்டால் மட்டும் போதாது, மனமிரங்கி செய்த தவறை உணர்ந்து பரஸ்பர மன்னிப்பு கேட்கும் பொழுது நிச்சயம் அம்பாளின் அருளோடு பிரிந்தவர்கள் மீண்டும் முன்பு போல ஒன்றிணைந்து கசப்பான அனுபவங்களை மறந்து புதியதொரு வாழ்க்கையில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி உறவாக இருந்தாலும் சரி, தந்தை மகன், தாய் சேய் என்று எந்த உறவினர்களுக்கும் இந்த ஒரு விளக்கு கசப்புகளை அகற்றும்.