மதிய உணவிற்காக சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏதேனும் குழம்பு வைத்து விட்டு, அதற்கு தொட்டுக்கொள்ள ஒரு வகை காய்கறிகளை சமைத்து வைக்கின்றனர். அதிலும் அடிக்கடி அனைவரது வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு உணவு என்று பார்த்தால் அது உருளைக்கிழங்கு வருவலாகும். இந்த உருளைக்கிழங்கு வறுவலை பிடிக்காதவர் என்று எவரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று உருளைக்கிழங்காகும். இந்த உருளைக்கிழங்கை பூண்டுடன் சேர்த்து சுவையான ஒரு மசாலா கிரேவியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது எப்பொழுதும் அனைவரது வீட்டிலும் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு சுவையில் இல்லாமல் சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். மறுபடியும் உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு சமைத்தால் இதே சுவையில் சமைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள அனைவரும் கேட்கும் வகையில் இதன் சுவை சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – அரை கிலோ, சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 4, காய்ந்த மிளகாய் – 8, பச்சை மிளகாய் – 2, பூண்டு – 50 கிராம், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், தனி மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், புளி – அரை எலுமிச்சை அளவு, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் அரை கிலோ உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி, குக்கரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் அவற்றை வெளியே எடுத்து ஆற வைத்து தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நறுக்கிய பச்சைமிளகாய், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை நன்றாக கொதித்து மிளகாய் தூள் வாசனை சென்றதும் அரை எலுமிச்சைபழ அளவு புளியை கரைத்து புளித்தண்ணீரை சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.