இந்து சமயத்தில், எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்குவது மரபு. அவர், ‘விக்னங்களைத் தீர்க்கும் விநாயகர்’ என்று போற்றப்படுகிறார். அதனால் தான் விக்னேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலிக்கிறார். நம் வாழ்வில் ஏற்படும் தடைகள், கஷ்டங்கள், தோல்விகள் மற்றும் தீராத பிரச்சனைகள் ஆகியவற்றை நீக்க விநாயகரின் அருள் மிகவும் அவசியம். விநாயகருக்குப் பலவிதமான வழிபாடுகள் இருந்தாலும், தேங்காயை வைத்துச் செய்யப்படும் பரிகாரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், எளிமையானதாகவும் கருதப்படுகிறது. தடைகளை தகர்க்கும் விநாயகருடைய தேங்காய் வழிபாடு முறைகளைப் பற்றிய ஆன்மிகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
விநாயகருக்கு தேங்காயின் முக்கியத்துவம்:
தேங்காய், சிவபெருமானின் முக்கண் அம்சமாகக் கருதப்படுவதுடன், மும்மூர்த்திகளையும் குறிப்பதாக ஐதீகம். தேங்காயின் வெளிப்புற ஓடு ஆணவத்தையும், உள்ளிருக்கும் இளநீர் அருள் என்னும் தெளிவையும் குறிக்கிறது. எனவே, விநாயகருக்குத் தேங்காய் உடைப்பது அல்லது சமர்ப்பிப்பது, நம் ஆணவத்தை உடைத்து, அருள் பெறுவதைக் குறிக்கும் ஓர் ஆழ்ந்த தத்துவமாகும். விநாயகருக்குச் செய்யப்படும் பரிகாரங்களில் மிகவும் பிரபலம், ‘சிதறு தேங்காய்’ உடைப்பது.
பரிகார முறைப்படி விநாயகர் ஆலயத்திற்குச் சென்று, நம்முடைய சங்கடங்கள், தடைகள் நீங்க வேண்டி மனமுருகப் பிரார்த்தனை செய்து, சிறிய அளவில் உள்ள தேங்காய்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் 1, 3, 5, 9, 21… விநாயகரின் முன் உடைக்க வேண்டும். தேங்காயை உடைக்கும் போது, நம்முடைய கஷ்டங்கள், தடைகள், கண் திருஷ்டிகள், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் சிதறிப் போகும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாடு, திருமணத் தடை நீங்குதல், சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடைகள் விலகுதல், காரிய சித்தி அடைதல் போன்ற பல நற்பலன்களைக் கொடுக்கும்.
சங்கடஹர சதுர்த்தி, வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை போன்ற விநாயகருக்கு உகந்த நாட்களில் இதைச் செய்வது மிகுந்த பலனைத் தரும். புதன் கிழமைகளிலும் அறிவில் சிறந்து விளங்க விநாயகருக்கு தேங்காய் உடைக்கலாம். குறிப்பிட்ட தேவைகளுக்கான தேங்காய் பரிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும், அதன்படி விநாயகருக்கு தேங்காய் வைத்து செய்யக்கூடிய பரிகாரமும் மாறும்.
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு:
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறைச் சதுர்த்தி திதியில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடும்போது, அவருக்குச் சுண்டல் அல்லது கொழுக்கட்டை படைத்து, தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால், வாழ்வில் இருக்கும் துன்பங்களும் தொடர் தோல்விகளும் நீங்கி, வெற்றிகள் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. விநாயகருக்கு அபிஷேகம் செய்யும் போதும், பூஜையின் போதும், பொதுவாக தேங்காயை நைவேத்தியமாக சமர்ப்பிப்பதும், தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றுவதும் விக்னங்கள் தீர உதவும் எளிய வழிபாடுகளாகும். திங்கட்கிழமைகளில் தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு விநாயகருக்கு தேங்காய் தீபம் ஏற்றி, மனதார வழிபட்டால் எப்பேர்ப்பட்ட தடைகளும் தகர்த்து எரிந்து வெற்றி நடைபோடுவீர்கள்.
இதையும் படிக்கலாமே:
மூன்றாம் பிறை பணவசிய தாந்திரீக பரிகாரம்
விநாயகருக்குச் செய்யப்படும் தேங்காய் பரிகாரம், செலவு குறைந்தது, எளிமையானது. ஆனால், அதைச் செய்யும் பக்தரின் நம்பிக்கையும், மனமார்ந்த பிரார்த்தனையும் தான் அதன் முழுமையான பலனைத் தரும். விநாயகரைத் துதித்து, தேங்காயை அர்ப்பணிப்பதன் மூலம், நம் வாழ்வின் தடைகளை உடைத்து, வெற்றிகளையும், சுபிட்சத்தையும் எளிதாக அடையலாம் என்பது காலங்காலமாய் நிலவி வரும் நம்பிக்கையாகும். “ஓம் விக்ன விநாயகாய நமஹ!” இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி விநாயகருக்கு தேங்காய் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபடுதல், சகல விதமான தோஷங்களையும் நீக்கி நற்பலன்களை கொடுக்கும்.