வித்தியாசமான சுவையில் டக்குன்னு ரவை அப்பம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். இதன் சுவை அப்படியே உங்கள் நாக்கில் ஒட்டிக்கொள்ளும்.

appam1
- Advertisement -

விதவிதமாக எத்தனையோ வகைகளில் அப்பம் சுடலாம். அதில் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ரவை அப்பம் எப்படி செய்வது என்ற ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு ஸ்வீட் ஸ்னாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு சாயங்கால நேரத்தில் இதை செய்து கொடுக்கலாம். விருப்பமாக சாப்பிடுவார்கள்‌. சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி தான். வேலை அதிகம் இல்லை. இதில் சேர்க்கக்கூடிய பொருட்களும் பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய அத்தியாவசியமான பொருட்கள் தான். சரி நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்த்துவிடுவோம்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மைதா – 1 கப், ரவை – 3/4 கப், சர்க்கரை – 3/4 கப், உப்பு – 1 சிட்டிகை, ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன், சேர்த்து முதலில் எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு ஒரு டம்ளர் அளவு பாலை கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாவில் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த இந்த மாவை ஒரு மூடி போட்டு அப்படியே ஒரு மணி நேரம் போல ஊற வைத்து விடுங்கள். (மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

மாவு நன்றாக ஊறிய பின்பு 2 சிட்டிகை சோடா உப்பு சேர்த்து, நன்றாக கலந்து பாருங்கள். மாவு இட்லி மாவைப் போல கட்டியாக இருக்க வேண்டும். மாவு ரொம்பவும் தண்ணீராக இருந்தால், அப்பம் எண்ணெய் குடித்து விடும். ஆக நீங்கள் பால் ஊற்றி மாவை கரைத்து வைக்கும் போது கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். மாவு ஊறிய பின்பு, பால் அனைத்தையும் மாவு உறிஞ்சிக்கொண்டு மாவு ரொம்பவும் கட்டியாகி விட்டால் பரவாயில்லை. மீண்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம்.

மாவு ரொம்பவும் நீர்க்க ஆகி விட்டால் மீண்டும் மைதா மாவு ரவை சேர்க்க வேண்டியதாகி விடும். சரி இப்போது அப்பம் வார்ப்பதற்கு மாவு தயாராக உள்ளது. அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தயாராக இருக்கும் மாவை ஒரு ஸ்பூனில் எடுத்து சிறிய சிறிய அப்பமாக எண்ணெயில் விடவேண்டும். ஒரு அப்பம் விட்டு, அந்த அப்பம் மேலே எழும்பி வந்தவுடன் மீண்டும் அடுத்தடுத்து அப்பங்களை விட்டு, பொன்னிறமாக பக்குவமாக சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான ரவை அப்பம் தயார்.

அப்பத்தை எண்ணெயில் வார்க்கும் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள். மிக சூடாக இருக்கும் எண்ணெயில் அப்பத்தை வார்த்து விட்டால் மேலே வெந்து சிவந்து விடும். உள்ளே வேகாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

பின்குறிப்பு: தேவைப்பட்டால் நீங்கள் தயார் செய்த மாவுடன் துருவிய தேங்காய் 1/4 கப் அளவு சேர்த்துக்கொள்ளலாம். மைதா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கோதுமை மாவு சேர்த்தும் இந்த அப்பத்தை செய்யலாம். இருப்பினும் மைதா மாவு சேர்த்து செய்யும் போது அதனுடைய ருசி இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -